செய்திகள்

இணைப்புக்கள்

உங்கள் அபிப்பிராயங்கள்

News Articles

நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வது குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும் – மஹிந்த சமரசிங்க

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வது குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும் – மஹிந்த சமரசிங்க
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வது குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டுமென அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.


வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனின் அச்சுறுத்தல் மிகுந்த நடவடிக்கைகள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வது குறித்து மீள சிந்திக்க வைக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதனால் பிரிவினைவாதிகளுக்கு தமது இலக்கினை எட்ட இலகுவாக வழி கிடைக்குமா என கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்வது குறித்து தந்திரோபாய ரீதியில் மீளாய்வு செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் விக்னேஸ்வரன் போன்றவர்களினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை எந்தவொரு பொறுப்புணர்ச்சியுடைய அரசியல் கட்சியும் உதாசீனம் செய்யாது என குறிப்பிட்டுள்ளார்.


இன ரீதியாக நாடு பிளவுபடாதிருப்பதனை தடுக்கும் ஒரே சக்தியாக தற்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

 

அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(1) அபிப்பிராயங்கள்
03-10-2016, 17:31
 - Posted by Siva.
<<< வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனின் அச்சுறுத்தல் மிகுந்த நடவடிக்கைகள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வது குறித்து மீள சிந்திக்க வைக்கின்றது. >>> மஹிந்த சமரசிங்க.

பொருளாதாரத் துறைப் பட்டதாரியான திரு. மஹிந்த சமரசிங்கவின் கருத்து விந்தையாகவுள்ளது! தனிமனித அதிகாரவெறி பிடித்த ஒரு மனநோயாளியான திரு. J. R. ஜெயவர்த்தனவினால் கொண்டுவரப்பட்ட, 'சர்வ வல்லமையுள்ள ஜனாதிபதி ஆட்சி முறை', நாட்டிற்கு எந்த வகையான நன்மைகளை ஏற்படுத்திக் கொடுத்தது? இந்த ஆட்சி முறைமையைக் கொண்டிராத உலகின் ஏனைய நாடுகளைவிட இலங்கையில் காணப்படும் மக்களாட்சிச் சிறப்பம்சம் ஏதாவது ஒன்றையாவது இவரால் கூற முடியுமா? அன்று, மகிந்த ஆட்சிக் காலத்தில், ஆட்சியாளர்கள், சர்வதேச அரசியல் தலைவர்கள் மற்றும் உள்நாட்டு/ வெளிநாட்டுப் புத்திஜீவிகள் பலராலும், இனவாத அமைப்புக்களாகப் பட்டியலிடப்பட்ட, பொதுபலசேனா உள்ளிட்ட சில அமைப்புக்களுக்கு எதிராக இந்த ஆட்சி முறைமை மூலம் எதைச் சாதிக்க முடிந்தது? ('இவர்களை
ஆட்சியாளர்களே போஷித்து வளர்த்து வருகின்றார்கள்', என்பது, பரகசியமான இரகசியம்.)

அதிகம் வேண்டாம், இந்த இனவாதக் கோஷ்டியினர், நாட்டின் அரசியல் சாசனத்தையே அவமதிக்கும் விதமாகத் தேசியக் கொடியை எப்படியெல்லாம் தமது இஷ்டத்துக்கு மாற்றி அமைத்துத் தமது போராட்டங்களில் பயன்படுத்தியிருந்தார்கள்? மிகப் பாரதூரமான இக் குற்றம் குறித்து, அவர்களுக்கு எதிராக, அன்றைய/ இன்றைய ஆட்சியாளர்கள் என்ன நடவடிக்கைகளை எடுத்தார்கள்? சர்வ வல்லமையுள்ள பதவி இருந்தும், ஜனாதிபதியால் எதைச் சாதிக்க முடிந்தது?

திரு. விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் குறித்துப் பிரஸ்தாபிக்கும் இந்தப் படித்த மனிதன், இன்று வரை அதன் சரியான மொழிபெயர்ப்பை அறிந்திருந்தாரா? அவ்வளவு திறமையும், நேர்மையும் இருக்கும் ஒருவரால் 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து அமைச்சராகப் பவனிவர முடியுமா?

என்றோ ஒரு நாள் இந்தப் பதவியை அனுபவிக்கும் பாக்கியம் தனக்கும் வருமென்ற பேராசையில் இவர் இருக்கின்றாரோ என்னவோ, யார் கண்டார்?
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 

 

 

 

 
.