செய்திகள்

இணைப்புக்கள்

உங்கள் அபிப்பிராயங்கள்

News Articles

தனது உயிருக்கு உலைவைக்க தெற்கில் நடவடிக்கை எடுக்கபட்டு உள்ளதாக வடக்கு முதலமைச்சர் தெரிவிப்பு:-

 

தனது உயிருக்கு உலைவைக்க தெற்கில் நடவடிக்கை எடுக்கபட்டு உள்ளதாக வடக்கு முதலமைச்சர் தெரிவிப்பு:-

தனது உயிருக்கும் உலை வைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக செய்திகள் கிடைக்க பெற்று உள்ளதாகவும், அதனை செய்தவர்கள் விடுதலைப் புலிகளே என்று கதையைக் கட்டுவதற்கும் தெற்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். 

 
மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசுவின் இலங்கை அரசியல் யாப்பு நூல் வெளியீடு இன்று சனிக்கிழமை யாழ்.சரஸ்வதி மண்டபத்தில் , நடைபெற்றது.
 
அந்நிகழ்வில் முதலமைச்சரை பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். ஆனால் அந்நிகழ்வில் முதலமைச்சர் தவிர்க்க முடியாத நிலையில் கலந்து கொள்ள முடியவில்லை எனவும் , அவர் தனது உரையினை வாசிக்குமாறு எழுதி அனுப்பி இருந்தார் எனவும் தெரிவித்து அந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் க.சிற்றம்பலம், முதலமைச்சரின் உரையை வாசித்தார்.
 
அதில் முதலமைச்சர் குறிப்பிட்டு இருந்ததாவது, 
 
இன்றைய இளம் சந்ததியினரில் பெரும்பாலானோர் இலங்கை அரசியல், உலக அரசியல் போன்ற அரசியல் விவகாரங்களில் சிரத்தை காட்டாது ஒதுங்கியிருக்கின்ற அல்லது வேறு துறைகளில் கூடிய நாட்டங்களை கொண்டிருக்கின்ற தன்மைகளை பல சந்தர்ப்பங்களில் நான் அவதானித்திருக்கின்றேன். அரசியலில் நாட்டம் கொள்ளாதிருப்பினும் அரசியல் விவகாரங்களில் என்னைப் போன்றவர்கள் மாணவ பருவத்தில் இருந்தே நாட்டம் காட்டி வந்துள்ளோம். 
 
ஒரு மாணவன் அல்லது மாணவி கணிதம், விஞ்ஞானம், மொழி, கணனி, கற்கைநெறி ஆகியவற்றில் மட்டும் கற்றுத் தேறிவிட்டால் முழு மனிதனாக மாறிவிட முடியாது. பூகோள ரீதியாக எமது வதிவிடங்கள், வரலாற்றுப் பெருமைகள், அரசியல் சித்தாந்தங்கள் என்பவற்றையும் கற்றுத் தேறுகின்ற போதே அவர்கள் முழுமையடைகின்றார்கள். 
 
அரசியல் கற்கைநெறிகளை ஆழமாக கற்றுத்தேறுகின்ற போது எமது பாரம்பரியம், எமது இதுகாறுமான வளர்ச்சி, எமது சமூக நிலை போன்ற பலவற்றையும் நாம் புரிந்து கொள்கின்றோம்.  எம்மை அறியாமலே மொழிப்புலமையும் விருத்தியடையத் தொடங்கி விடுகிறது. 
 
அந்த வகையில் கடந்த சுமார் 85 ஆண்டு காலப்பகுதியின் போது இலங்கை அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், அரசியல் தலைவர்களின் பேரினவாதப்போக்கு, தமிழர்கள் மீதான அடக்குமுறை போன்ற பல விடயங்களை உள்ளடக்கி அரசியல் தத்துவங்களை அனைவரும் இலகுவில் அறிந்து, உணர்ந்து அதன்பால் நாட்டம் கொள்ளத்தக்க வகையில் இந்த நூலை வடிவமைப்புச் செய்து அதன் வசன நடையை எளிய தமிழ் வடிவில் ஆக்கித்தந்த படைப்பாளர்; அவர்களுக்கு முதற்கண் எனது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கின்றேன்.
 
இலங்கை அரசியல் வரலாற்றில் கடந்த நூறு ஆண்டு காலங்களாக தமிழ் மக்கள் தமது அரசியல் முன்னெடுப்புக்களில் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதும் அதன் விளைவாகத் தோல்விகளைத் தழுவிக் கொள்கின்ற செயற்பாடுகளும் நடைபெற்றுவருவது நாம் அனைவரும் அறிந்துள்ள விடயம். இந்நூலில் குறிப்பிட்டவாறு தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு வெற்றிக்கான வழிவகைகளைத் தேடுவதற்கு நாம் தயார் இல்லை எனின் தொடர்ந்தும் நாம் தோல்விகளைச் சந்திப்பதற்கு தயாராகின்றோம் என்பதே யதார்த்தம் ஆகின்றது. 
 
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது அணுகுண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகி பேரழிவுற்ற ஜப்பான் அக்கணமே தன்னைச் சுதாகரித்து தனக்கு ஏற்பட்ட சவாலை எதிர் கொண்டு சுமார் கால் நூற்றாண்டு காலப்பகுதியில் தன்னை இரண்டாவது உலகப் பொருளாதார வல்லரசாக ஆக்கிக் கொண்டது. ஐரோப்பியர்களின் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகி பாரிய இன அழிப்புக்குள்ளாக்கப்பட்ட யூத மக்கள் தமக்கு ஏற்பட்ட பாரிய இனக்கொலைகளின் சவால்களை எதிர் கொண்டு, ஐக்கியப்பட்டு, அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி புதிய அரசை உருவாக்குவதில் வெற்றி பெற்றனர். 
 
இலங்கையில் வாழும் தமிழர்களும் ஓரணியின் கீழ் ஐக்கியப்பட்டு தமது உரிமைக்காக வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு என்ற பேதங்கள் இன்றி மொழியால் ஒன்றுபட்டு உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டிய காலம் கனிந்து வந்துள்ளது. 
 
சில வேளைகளில் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றியும் அவர்களின் சுய நிர்ணய உரிமை பற்றியும் சில சிங்கள தலைவர்களும் இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட தலைவர்களும் அவ்வப்போது சார்பான கருத்துக்களையும், ஒத்தியைவுகளையும் வெளிப்படுத்தி வந்த போதும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அவர்கள் தமது கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு தமிழின அழிப்பை ஏற்றுக்கொள்கின்ற அரசியல் தலைவர்களாக மாற்றம் பெற்றது நாம் தெரிந்ததே. 
 
ஆகவே சிங்கள மக்கட் தலைவர்கள் எந்தளவு மனிதாபிமானம் உடையவர்களாக இருந்தாலும் இனவேற்றுமையின் பொறிகளுக்குள் சிக்கி விட்டால் அவர்கள் மனிதாபிமான நடுவிலிருந்து வழுகிவிடுகின்றார்கள். அதற்கு பதிலாகத் தமிழர்கள் இனவாதம் பேசுவதால்த்தான் தாமும் பேசுவதாகக் கூறுகின்றார்கள். 
 
தமிழர்கள் தமது உரிமைகளை அதாவது அவர்களின் பாரம்பரிய நிலங்களில் குடியேறுவதற்கும் அங்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தமது கலாச்சாரங்களை பேணிப் பாதுகாப்பதற்கும் இராணுவப் பிரசன்னம் அற்ற இயல்பு வாழ்க்கையை வாழ்வதற்கும், விரும்பி மேற்கொள்ளும் நியாயபூர்வமான போராட்டங்கள், கோரிக்கைகள் ஆகியன சிங்களத் தலைமைகளுக்கு இனவாதத்தைத் தூண்டுகின்ற ஒரு செயலாகத் தென்படுகின்றது. 
 
அதனால் உரிமைக்காக குரல்கொடுக்கும் தமிழ் அரசியல் தலைவர்களை சிறையில் அடைக்க வேண்டும், ஒட்டுமொத்த தமிழர்களையும் இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும் எனச் சிலர் சிங்கள பேரினவாதிகளாக மாறிக் கொக்கரிக்கின்றார்கள். 
 
 
எமது உரிமைக்காக நாம் குரல் கொடுக்கின்ற போது இனவாதம் பேசுகின்றோம், சிங்கள மக்களைச் சினமடையச் செய்கின்றோம், இந்த நாட்டில் மீண்டும் ஒரு முறை இனக்கலவரங்களை உண்டாக்குவதற்கு முயற்சிக்கின்றோம் என்று கூறுகின்றார்கள். தமிழ் மக்களை அடக்கியாள முயற்சித்து அவர்கள் அது சார்பாக நடவடிக்கைகள் எடுப்பதை நாம் கண்டும் காணாதது மாதிரி இருக்க வேண்டும் என்று இவர்கள் கருதுகின்றார்களா? 
 
உதாரணத்திற்கு சட்ட வலுவற்ற தன்மையில் வடமாகாணத்தில் புத்த விகாரைகள் கட்டப்பட்டு வருகின்றன என்று தான் நாம் அண்மையில் கூறினோம். அதனைத் திரித்து வடமாகாணத்தில் புத்தவிகாரைகள் கட்டக்கூடாது; சிங்கள மக்கள் குடியிருக்கக் கூடாது; சிங்கள மக்கள் வடமாகாணத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றெல்லாந் திரித்துக் கூறி என் மீதான பலத்த ஒரு வெறுப்பியக்கத்தை ஆரம்பித்துள்ளார்கள். 
 
ஆகவே நாம் எமது பிரச்சினைகளைக் கூறக் கூடாது. அவர்கள் தருவதை ஏற்க வேண்டும்; என்ற ஒரு எண்ணப்பாடே இன்று பெரும்பான்மை மக்கள் பலரிடம் இருந்து வருகின்றது. இதற்குள் அரசியலும் சேர்ந்து எனது உயிருக்கும் உலை வைக்க நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. 
 
அது மட்டுமல்ல. அவற்றைச் செய்தவர்கள் விடுதலைப் புலிகளே என்று கதையைக் கட்டுவதற்கும் தெற்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
 
இலங்கைத்தீவு சிங்கள மக்களுக்கு மட்டும் சொந்தமானதொரு தீவாக மாற்றப்பட வேண்டும் என்பதையே அனைத்து அரசுகளும் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகத் தெரிகின்றது. அவர்கள் தரும் உரிமைகளை மட்டுமே நாங்கள் பெறலாம். 
 
சட்டப்படி எமக்கிருக்கும் உரித்துக்களைக் கேட்டால் தாம் அவற்றைத் தர மாட்டார்கள் என்று கூறுவதாகவே இதுவரையான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 
 
ஹிட்லரின் படுகொலைகள் யூதர்களுக்கு எவ்வாறு விடுதலை உணர்வை போதித்ததோ அதே போன்று முள்ளிவாய்க்கால் துயரங்கள் தமிழ் மக்களுக்கு தமது நிலையை உணர வழி வகுக்க வேண்டும். 
 
நாம் தொடர்ந்தும் எம்மிடையே பகைமை உணர்வுகளையும் அரசியல் போட்டி பொறாமைகளையும், காட்டிக் கொடுக்கும் காக்கை வன்னியர்களாகக் காலத்தை ஓட்டுவதையும் நிறுத்த வேண்டும். கற்றுக் கொண்ட பாடங்கள் மூலமாக தூய்மையான வரலாறு ஒன்றை தமிழ் மக்கள் இனியாவது படைக்க முன்வர வேண்டும். 
 
அதுவரை எத்தனை இடையூறுகள் வரினும் அவற்றை எதிர்கொள்ள நாம் தயாராகிக்கொள்ள வேண்டும் என்பதை இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன். என தெரிவித்தார்.

கிராம அபிவிருத்தி திணைக்களம்
வடக்கு மாகாணம்
மாகாணக் கண்காட்சி
'முயற்சியே எமது மூலதனம்'
கூட்டுறவு கலாசார மண்டபம்
கிளிநொச்சி
01.10.2016 பிற்பகல் 3.00மணியளவில்
பிரதம அதிதிஉரை
குரூர் ப்ரம்மா..........................................................


இந்நிகழ்வின் தலைவர் அவர்களே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களே, கௌரவ வடமாகாண போக்குவரத்து மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் அவர்களே,வடமாகாண பிரதம செயலாளர் திரு.பத்திநாதன் அவர்களே,கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அருமைநாயகம் அவர்களே, மீன்பிடி போக்குவரத்து அமைச்சின் செயலாளர் திரு.சத்தியசீலன் அவர்களே, மற்றும் இங்கே கலந்து கொண்டிருக்கும்திணைக்கள அதிகாரிகளே, கண்காட்சி நிகழ்வுகளின் பங்காளர்களே, சகோதர சகோதரிகளே, குழந்தைகளே!


வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் 'முயற்சியே மூலதனம்' என்ற கருப்பொருளில் இங்கு நடைபெற இருக்கின்ற மாகாண கண்காட்சியை திறந்து வைத்து உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.


1948களில் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் ஜனநாயக அரசியல் முறைமைகள் வளர்ச்சி பெறத்தொடங்கிய போது ஜனநாயக முறைமைகளை மக்களிடையே அறிமுகப்படுத்தவும் கிராமிய மட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் உருவாவதை உறுதிப்படுத்தவும் இந்தக் கிராம அபிவிருத்தி என்ற கருப்பொருள் உருவாக்கம் பெற்றது. இலங்கையிலும் சமகாலத்தில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டு மக்களுக்கான கிராம அபிவிருத்தி பயிற்சி நிலையங்களும் உருவாக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவ்வாறு கீழ்மட்ட நிலையிலிருந்து அறிமுகமான அரசியல் அறிமுகம் கீழிருந்து மேல்நோக்கியதாக வளர்ச்சியுறத்தக்க வகையில் ஜனநாயக அமைப்பு முறை உருவாக்கப்பட்டது மட்டுமன்றி அரச நிதிகளும் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஊடாகவே அபிவிருத்திப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டன. இது காலப்போக்கில் பன்முகப்படுத்தப்பட்ட ஒதுக்கீடுகளாக மாறி மக்கள் பிரதிநிதிகளூடாகஅவையும் கிராமங்களில் உள்ள அபிவிருத்தி வேலைகளுக்கும் மற்றும் உட்கட்டுமானப் பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டன.


முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸா அவர்களின் காலத்தில் சனசமூக அபிவிருத்தி நிலையங்கள் உருவாக்கப்பட்டன. அத்துடன்அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு கிராம அபிவிருத்தி திட்டங்களில் இந்த அபிவிருத்தி நிலையங்கள் பங்கு கொள்வதற்கும் மக்களை வலுவூட்டல் நிகழ்வுகளில் பங்குபெறச் செய்வதற்கும் கைத்தொழில் முயற்சிகள், கிராமிய தொழில் முயற்சிகளை மேம்படுத்தவும் அறிமுகப்படுத்தப்பட்டது.


கிராமங்கள் தோறும் இருக்கக்கூடிய  நலிவுற்ற மக்கள், விஷேட தேவையுடையவர்கள், அசாதாரண சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற இன்னோரன்ன தேவைகளை உடையவர்களின் வாழ்வாதார படிநிலையை உயர்த்துவதற்கும் அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படச் செய்வதற்குமாக கிராம அபிவிருத்தித் திணைக்களம் பல்வேறு திட்டங்களை தயாரித்து செயற்படுத்தி வருகின்றமை மகிழ்வைத் தருகின்றது. கிராமங்கள் தோறும் இவ்வாறான செயற்பாடுகள் மாதர் அபிவிருத்திச் சங்கங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் என்பவற்றின் ஊடாக சிறு சிறு வேலைத்திட்டங்கள் அதே போன்று தொழிற் பயிற்சிகள் என்பவற்றை வழங்குவதன் மூலம் கிராமங்கள் அபிவிருத்தி அடைவன இவ்வாறாக கிராமங்கள் அபிவிருத்தி அடைய அதையொட்டிய நகரங்களும் அபிவிருத்தி அடைவன. இந்த அபிவிருத்தி படிமுறையில் கிராமங்கள், நகரங்கள், பிரதேசங்கள், மாகாணங்கள்,முழுநாடும் என்ற வகையில் நாட்டின் அபிவிருத்தியை கீழ்மட்டத்தில் இருந்துமேல்நோக்கி எடுத்துச் செல்லுகின்ற திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களங்கள் செயல்ப்படுகின்றன.


வடமாகாணத்தைப் பொறுத்த வரையில் ஏனைய மாகாணங்களின் செயற்பாடுகளுக்கு மேலதிகமாகவிஷேட தேவை உடையவர்களுக்கும் போரினால் பாதிக்கப்பட்ட போராளிகள், அவர்களின் குடும்பங்கள், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள், மற்றும் அவர்களின் குடும்பங்கள் ஆகியோரின் வாழ்வாதாரங்களையும் ஊக்குவிக்க வேண்டிய அத்தியாவசிய தேவை எமக்கு இருக்கின்றது.


கடந்த இரண்டு வருட காலங்களில் வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் அதன் மூலமாக நிறைவேற்றப்பட்ட அபிவிருத்திப் பணிகள், வாழ்வாதார பணிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆவண படங்கள் இங்கே திரையிடப்பட்டன. அது போன்று கடந்த வருட பயிற்சிகளின் போது அதாவது ஒவ்வொரு பிரதேச செயலகங்களின் கீழும் 25 பிள்ளைகள் என்ற கணக்கில் வடமாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்கள் அமைந்திருக்கும் பகுதிகளிலும் விஷேட வகுப்புக்களை ஒழுங்கு செய்து அதன் மூலம் அழகுபடுத்தல் கலைகளும்,மற்றும் மனைப்பொருளியல் துறையில் டிப்ளோமா கற்கை நெறிகளையும் அதுபோன்று தையற்கலை மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் கலையிலும் மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட்டு இந்தப் பயிற்சியின் முடிவிலே சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களும் இன்று இங்கு கௌரவிக்கப்பட்டிருந்தனர். இவ்வாறான கௌரவங்கள் மூலமாக ஏனைய மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தாமும் இப்படியான போட்டிகளில் போட்டி போட்டுக் கொண்டு முதல் நிலையை அடைய வேண்டும் என்ற ஒரு உந்துசக்தி உருவாவதுடன் அவர்களின் தயாரிப்புக்களும் தரமானதாகவும் சந்தைப் பெறுமதி மிக்கதாகவும் அமைவன. இன்று இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் இவ்வாறான தயாரிப்புக்கள் மூலமாக தயாரிக்கப்பட்டவை எனத் தெரிவிக்கப்பட்டது.


இன்னும் மேலதிகமாக சுயதொழில் வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற உதவிகளும் இத்திணைக்களத்தினால் வழங்கப்படுகின்றமையால் வாழ்வாதார நிலைகளை உயர்த்தக்கூடிய வகையில் குடிசைக் கைத்தொழில்கள் அல்லது சிறு கைத்தொழில்கள்போன்ற இன்னோரன்ன தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்குரிய நிதி வளங்களையும் உதவுவதற்கு இந்த திணைக்களத்தினுடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


மக்களை பொருளாதார நிலையில் மேம்படச் செய்வதற்கு எவ்வளவு திட்டங்கள் வகுக்கப்பட்டாலும் அத்திட்டங்கள் முறையாக பயனாளிகளால் பின்பற்றப்படாதவிடத்து அவை பயனற்றதாகிவிடும். அதே போன்று இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற அரச உத்தியோகத்தர்களும் கீழ் மட்டத்திற்கு இறங்கிச் சென்று இத்திட்டங்களை இதய சுத்தியுடன் நிறைவேற்ற முயலாதவிடத்து அவையும் அர்த்தமற்றவையே.


அந்த வகையில் இன்றைய நிகழ்வில் மாகாண அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் வடமாகாணத்தில் இயங்குகின்ற கிராம அபிவிருத்தித் திணைக்கள அனைத்து மட்ட உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட இக் கண்காட்சிசிறப்புற எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து எனது உரையை இந்தளவில் நிறைவு செய்கின்றேன்.
நன்றி.
வணக்கம்

நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
 

அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(6) அபிப்பிராயங்கள்
01-10-2016, 23:30
 - Posted by Solomon
ஹா ஹா ஹா... உங்களைபோன்றவர்கள் நீண்டகாலம் வாழவேண்டும். அப்போதுதான் வடக்கில் இருந்து மேலும் தமிழ் மக்கள் வெளிநாடு அல்லாது கொழும்பு நோக்கி வெளியேறுவார்கள்... தமிழ் எம்பிக்கள் தொகை குறையும்.... சிங்களவர்களும் முஸ்லிம்களும் வெற்றிடத்தை நிறப்புவார்கள் .
03-10-2016, 05:04
 - Posted by Siva.
<<< எனது உயிருக்கு உலை வைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக செய்திகள் கிடைக்க பெற்றுள்ளன. 'அதனை செய்தவர்கள் விடுதலைப் புலிகளே', என்று கதையைக் கட்டுவதற்கும் தெற்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. >>> சி.வி.விக்னேஸ்வரன்.

முதலமைச்சர் திரு. விக்னேஸ்வரனின் சந்தேகம் நியாயமானதே! தாம் அரசியலில் நிலையானதொரு இருப்பைக் கொண்டிருக்கவேண்டுமென்பதற்காகத் தனது இனத்தைச் சார்ந்த திரு. லசந்த விக்கிரமதுங்க, திரு. எக்நேலியகொட மற்றும் ரகர் வீரர் திரு. வசிம் தாஜூடின் போன்றவர்களையே ஈவு இரக்கமின்றிக் கொன்றவர்கள், 'தாம் விட்ட இடத்தைத் திரும்பப்பெற எதையும் செய்வார்கள்', என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்? 'தனக்கெதிராக இது போன்ற எதிர்ப்பு ஒன்று உருவாகும்', என்று அறியாது திரு. விக்னேஸ்வரன் செயற்பட்டிருக்கமாட்டார்! 'நியாயாதிக்கத்தின்பால் அவர் கொண்டிருக்கும் நம்பிக்கையும், ஆன்மீகத்தில் அவர் கொண்டிருக்கும் ஈடுபாடும், அவரைக் காப்பாற்றும்', என நம்புவோம்!

இதில் மிகக் கவலை தரும் விடயம் என்னவென்றால், 'உரிமைக்காக நியாயமாகப் போராடியவர்கள் எல்லோரையும் நயவஞ்சகமாகக் கொன்ற இரு பிரதான பெரும்பான்மைக் கட்சியினரும், இனப் பிரச்சனைத் தீர்வு விடயத்தில் நியாயமாக நடந்து கொள்வார்களென்று இன்னும் நம்புபவர்கள்', எம்மிடையே இருந்துகொண்டு, இவர் போன்றோரைக் காட்டிக் கொடுக்க முற்படுவதுதான்! 'எழுக தமிழ்', நிகழ்வானது என்னமாதிரியான கோரிக்கைகளைக் கொண்டது, என்பதை நிகழ்வு நடைபெறுமுன்பே ஏற்பாட்டாளர்கள் தெரியப்படுத்தியிருந்தார்கள்? அதற்கு அனுமதி வழங்கிய பாதுகாப்புத் துறைக்கு எந்த வித களங்கமும் ஏற்படாத வகையில் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது! ஆனால், இந்நிகழ்வைத் தொடர்ந்து, வவுனியாவிலும், கொழும்பிலும் முறையே,
'பொதுபலசேனா' மற்றும் 'சிங்கள இரத்தம்', ஆகிய அமைப்புக்கள் ஒட்டுமொத்த இனவாத ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் திட்டமிட்டே ஈடுபட்டன! இவற்றுக்கு எந்த ரீதியில் ஆளும் நல்லாட்சி அரசு அனுமதி வழங்கியது? இனவாதிகளின் இனவாதக் கருத்துக்களை எவரும் இன்று வரை கண்டிக்கவில்லையே?

'ஊடக தர்மத்தை அரசுகள்தான் மீறுகின்றன, என்றால், எமக்காக உண்மையைச் சொல்ல ஒரு பெரும்பான்மை ஊடகம் கூட முன்வந்திருக்கவில்லையே? முதல்வரின் பேச்சை எப்படியெல்லாம் படு விகாரமாகத் திரித்துச் செய்தி எழுதின? ஒரு பெரும்பான்மை ஊடகமாவது முதலமைச்சரின் அறிக்கையை நேர்மையாக மொழிபெயர்த்துப் பிரசுரிக்கவில்லையே? ஜனாதிபதியும், பிரதமரும் இது குறித்து வெளிப்படையாகக் கருத்துக் கூறவில்லையேயன்றி, ஆளும் அரசின் சில அமைச்சர்கள், அரசியல்வாதிகள் மற்றும் கூட்டு எதிக் கட்சியினர் என, எல்லோருமே, எப்படியெல்லாம் இனவாதக் கருத்துக்களைக் கக்கினார்கள்? இவற்றைக் கண்டிக்காத, நியாயமான கருத்தை முன்வைக்காத ஜனாதிபதி மற்றும் பிரதமர் கூடத் தமது ஆட்சியைத் தக்கவைப்பதற்காக, வாய் மூடி மௌனியாக இருப்பதையே தமது தெரிவாக்கிக் கொண்டார்கள்?

ஒன்று மட்டும் மிக நன்றாகத் தெரிகின்றது! அன்றைய UNP யினரோ, SLFP யினரோ அன்றி இன்றைய இரு பெரும்பான்மைக் கட்சிகள் இணைந்த தேசிய (நல்லாட்சி?)அரசோ, 'தமது எதிர்கால இருப்புக்குப் புலிப் பயங்கரவாதத்தையும், இனவாதத்தையும் விட்டால், வேறு மார்க்கமேயில்லை', என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்! இவர்களின், அரசியல்
சாசனத் திருத்தம் ', என்பது வெறும் ஏமாற்று வேலையே, என்பதில் சந்தேகமில்லை!பெரும்பான்மை இனவாதிகளையும், பௌத்த மகா சங்கங்களையும் மீறி இவர்களால் எதையும் செய்ய முடியாது?

நல்லாட்சிச் சாயம் வெளுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!
03-10-2016, 14:50
 - Posted by Solomon
//உரிமைக்காக நியாயமாகப் போராடியவர்கள் எல்லோரையும் நயவஞ்சகமாகக் கொன்ற//
அடங்கா தமிழன் அமிர்தலிங்கத்தை விடவா உரிமைக்காக சாத்வீகமாக போராடியவர்கள் இருக்கிறார்கள்...?
அவரை நயவஞ்சகமாகக் கொன்றது யாரு ?
அவரையும் அவரைப்போன்ற பெரும் தமிழர்களை நயவஞ்சகமாகக் கொன்று விடடதனால் தானே கொழும்பில் இருந்து தமிழ் தலைவர்கள் இறக்குமதி செய்ய படுகிறார்கள்...

சும்மா கதை விடாதீர்கள் அப்பனே !
05-10-2016, 07:28
 - Posted by Anonymous
நீங்கள் சொல்லுறதெல்லாம் சரி சிவா...அப்பா எங்கட பிரச்சனைக்கு நீங்கள் கருதும் தீர்வு என்ன ?..நாங்கள் என்னதான் தலை கீழாக நின்றாலும் பெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியுடனும் மத்திய அரசாங்கத்தினுடனும் தான் எமக்கான தீர்வு கிடைக்கும். இதுவே யதார்த்தம்..எமது விருப்பு வெறுப்பு என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே..
இனியும் சர்வதேசம் எமக்கு எதுவும் செய்யும் என்ற நம்பிக்கை கானல் நீரே..அவர்களுக்கு எங்கள் பிரச்சனை என்பது உலகளவில் இப்ப நடக்கிற பிரச்சனைகளோடு ஒப்பிடும்போது ஒரு சிறு துளியே.
சிங்களவன் எங்களுக்கு எதுவும் தர மாடடான் என்பதும் அவர்கள் நீங்கள் சொன்னது போல மஹாசங்கத்தையும் பேரினவாதிகளையும் மீறி எதுவும் செய்ய முடியாது என்பதும் யதார்த்தமே.
இப்போதைய சூழ்நிலையில் எங்கள் மக்களை உணர்ச்சி வசப்பட வைக்காது யதார்த்தத்தை உணர வைத்து சாதுர்யமாக எமக்கான தீர்வை பெறுவதே புத்திசாலித்தனம்.
நாங்கள் எமது 30 வருட போராட்டத்தில் பெற்றதும் இழந்ததும் காணும். இனியாவது தாயகத்தில் இருக்கும் எல்லா துன்பத்தையும் தாங்கிய மக்களை எதிர்காலத்திலான நம்பிக்கையுடன் வாழ வைக்க எல்லோரும் உழைப்போம்.
நல்லாட்சியும் போனால் இனி வரும் ஆட்சி இதை விட மோசமானதாகவும் இருக்கலாம்.
முள்ளிவாய்க்காலில் இடுப்பில் கட்டிய துண்டையும் அவிழ்த்து காட்டி விட்டு வந்த மக்களை இனியாவது வாழ்வின் மீதான நம்பிக்கையுடன் வாழ வைப்போம்
06-10-2016, 04:28
 - Posted by Anonymous
நீங்கள் சொல்லுறதெல்லாம் சரி சிவா...அப்பா எங்கட பிரச்சனைக்கு நீங்கள் கருதும் தீர்வு என்ன ?..நாங்கள் என்னதான் தலை கீழாக நின்றாலும் பெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியுடனும் மத்திய அரசாங்கத்தினுடனும் தான் எமக்கான தீர்வு கிடைக்கும். இதுவே யதார்த்தம்..எமது விருப்பு வெறுப்பு என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே..
இனியும் சர்வதேசம் எமக்கு எதுவும் செய்யும் என்ற நம்பிக்கை கானல் நீரே..அவர்களுக்கு எங்கள் பிரச்சனை என்பது உலகளவில் இப்ப நடக்கிற பிரச்சனைகளோடு ஒப்பிடும்போது ஒரு சிறு துளியே.
சிங்களவன் எங்களுக்கு எதுவும் தர மாடடான் என்பதும் அவர்கள் நீங்கள் சொன்னது போல மஹாசங்கத்தையும் பேரினவாதிகளையும் மீறி எதுவும் செய்ய முடியாது என்பதும் யதார்த்தமே.
இப்போதைய சூழ்நிலையில் எங்கள் மக்களை உணர்ச்சி வசப்பட வைக்காது யதார்த்தத்தை உணர வைத்து சாதுர்யமாக எமக்கான தீர்வை பெறுவதே புத்திசாலித்தனம்.
நாங்கள் எமது 30 வருட போராட்டத்தில் பெற்றதும் இழந்ததும் காணும். இனியாவது தாயகத்தில் இருக்கும் எல்லா துன்பத்தையும் தாங்கிய மக்களை எதிர்காலத்திலான நம்பிக்கையுடன் வாழ வைக்க எல்லோரும் உழைப்போம்.
நல்லாட்சியும் போனால் இனி வரும் ஆட்சி இதை விட மோசமானதாகவும் இருக்கலாம்.
முள்ளிவாய்க்காலில் இடுப்பில் கட்டிய துண்டையும் அவிழ்த்து காட்டி விட்டு வந்த மக்களை இனியாவது வாழ்வின் மீதான நம்பிக்கையுடன் வாழ வைப்போம்
06-10-2016, 14:02
 - Posted by Siva.
//அமிர்தலிங்கத்தை நயவஞ்சகமாகக் கொன்றது யாரு? அவரையும் அவரைப்போன்ற பெரும் தமிழர்களை நயவஞ்சகமாகக் கொன்று விடடதனால் தானே கொழும்பில் இருந்து தமிழ் தலைவர்கள் இறக்குமதி செய்ய படுகிறார்கள்...//

தலைவர் திரு. அமிர்தலிங்கம் கொல்லப்பட்டதை நியாயப்-படுத்துவது எனது நோக்கமல்ல! அன்றைய பெருந் தலைவர்களான/ மக்கள் அபிமானம் பெற்ற ஆபிரகாம் லிங்கனைக் கொன்ற ஜோன் பூத்துக்கும், மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்ஸேக்கும் கூட, தமது செயற்பாடுகளுக்காக ஒரு நியாயம் இருந்திருக்கின்றது போலும்? பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால், இவற்றைத் தவிர்க்க முடியாது! இதை அறிந்துதானே நீங்களும், நானும் அரசியலுக்கு வரும் துணிவோ அன்றி முதுகெலும்போ இல்லாமல், யார் யாரோ செய்திகளுக்கு விமர்சனம் செய்து கொண்டிருக்கிறோம்?

அது சரி, கொழும்பு என்ன வெளிநாடா? வடக்கு- கிழக்கு வாழ் அரசியல்வாதிகள் கொழும்புல் அரசியல் செய்வதும், கொழும்பு வாழ் தமிழர்கள் யாழில் அரசியல் செய்வதும், ஐக்கிய இலங்கைக்குள்தானே? இதிலென்ன புதுமையை இந்த அறிவுக் கொழுந்து கண்டு பிடித்ததோ, அதுக்கே வெளிச்சம்?

முகவரியில்லாத அந்த நண்பர் என்ன சொல்ல வருகின்றாரென்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை? சிறுபான்மைத் தமிழராகிய நாமோ அன்றித் திரு. விக்னேஸ்வரனோ, 'எமக்கான தீர்வு மத்திய அரசிடம்தான் உள்ளது', என்று அறியாமல் பேசவில்லையே? ஒற்றை ஆட்சியில் நியாயமான தீர்வை அவர்களிடம்தானே கோருகின்றோம்? அரசு தெரிந்தே செய்யும் தவறுகளை விநயமாகக் கூறுவது, எப்படித் தவறாகும்? கோரிக்கைகள் விகாரமாகத் திரிபு படுத்தப்படுவதற்கும்கூடக் காரணம், அதே இனவாதமே? போராட்ட காலமான 30 வருடங்களுக்கு முன்பான 30 வருடங்கள், அன்றைய எமது அரசியல் தலைவர்கள் செய்யாத எதையும் இன்றைய தலைவர்கள் செய்யவில்லையே? அன்றும் கூட, நில அபகரிப்புக்கும், வலிந்த சிங்களக் குடியேற்றத்துக்கும் எதிராகவும், தமிழுக்கான உரிய அந்தஸ்துக்காகவும் தான் திரு. செல்வநாயகமும் திரு. நாகநாதனும் சாத்வீகப் போராட்டம் நடாத்தி பேரினவாதச் சிங்களத் தலைமைகளிடம் அடி, உதை வாங்கினார்கள்? எமது கோரிக்கைகள் கிடைக்கும் வரை, இவ்வாறான போராட்டங்ககளை விட்டால், வேறு தெரிவெதுவும் இருப்பதாகத் தெரியவும் இல்லை? இதைக் கூடச் செய்வது தவறா? இதை நீங்கள் ஏன் சிங்களத் தலைமைக்கு எதிரான போராட்டமாகப் பார்க்கின்றீர்கள்? இணக்க அரசியல் செய்து கொண்டிருக்கும் எமது தமிழ்த் தலைமைகளுக்கு ஆதரவானதொரு போராட்டமாகவும் பார்க்கலாமே? 'இணக்க அரசியல் செய்யும் தலைமகளுக்கு ஏற்படும் நெருக்கடியை', ஆட்சியாளர் உணர, இது ஒரு காரணியாகவும் அமையுமல்லவா? நடந்திருப்பதும் அதுதானே? பேரினவாதிகளின் கண்டனங்களைக் கண்டும் காணாமலும் இன்றைய ஆட்சியாளர்கள்(ஜனாதிபதி; பிரதமர்) இருந்தாலும், வெளிப்படையாக யாரையும் இன்று வரை அவர்கள் கண்டிக்கவில்லையே? (சிண்டுகளினூடாகத் தமது கருத்தைத் திணிக்கின்றார்கள் என்பது, வேறு விடயம்)

// இப்போதைய சூழ்நிலையில் எங்கள் மக்களை உணர்ச்சி வசப்பட வைக்காது யதார்த்தத்தை உணர வைத்து சாதுர்யமாக எமக்கான தீர்வை பெறுவதே புத்திசாலித்தனம்.//

சாதுரியமாக எமது தீர்வைப் பெறச் சிங்கத் தலைமைகள் ஒன்றும் இளிச்சவாயர்கள் இல்லையே? அவர்களின் அரசியலே இனவாதத்தின் மீதுதானே கட்டப்படுகின்றது? ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் பின்பும் வரும் புது ஆட்சி, 'இருந்த ஆட்சியை விட மோசமானதாக இருந்ததைதான் கண்கூடாகக் காண்கின்றோம்'? எதோ நம்பிக்கை காரணமாவே சிறுபான்மையினரின் தயவுடன் ஆட்சி மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன! ஆனாலும் ஏமாற்றங்கள்தான் எஞ்சுகின்றன? இதை, 'எமது இனத்துக்கேயாகான சாபம்', என்று சொல்வதை விட, வேறென்னவென்று சொல்ல?
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 

 

 

 

 
.