செய்திகள்

இணைப்புக்கள்

உங்கள் அபிப்பிராயங்கள்

News Articles

அமெரிக்க அதிபர் தேர்தல் - மாறும் காட்சிகள் : ராஜாஜி ஸ்ரீதரன்

 

அமெரிக்க அதிபர் தேர்தல் - மாறும் காட்சிகள் :    ராஜாஜி ஸ்ரீதரன்வாக்குறுதிகளை நம்பி வேட்பாளர்களை வெற்றியடைச் செய்து மக்கள் எப்பொழுதும்  தோல்வியை தழுவுவதே வழக்கமாகிவிட்ட  தேர்தலில்  முடிவுகள் எதிர்பார்ப்பது போன்றோ ஊகிப்பது போன்றோ எல்லா வேளைகளிலும்  அமைந்து விடுவதில்லை.

ஆற்றுலும் தகைமையும் கொண்ட பல போட்டியாளர்களிலிருந்து மிகச்சிறந்த ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை ஏற்படும் போதோ  தலைமைப்  பதவிக்கு எந்த  வகையிலும் பொருத்தமில்லாதவர்கள் அல்லது தகுதியற்றவர்கள்  என்று மக்களால் கருத்தப்படுபவர்கள்  தேர்தல் களத்தில் காணப்படும் போதோ முடிவை எதிர்வு கூற முடியாத நிலை ஏற்படும். இந்த பொதுவான அவதானிப்புக்கு  உலகத்தலைமை நாடென்று  கருதப்படும் அமெரிக்க மக்களோ அதன் அதிபர் தேர்தல் களமோ விதிவிலக்காக முடியாது.வரலாற்றில் ஒரு போதும் இல்லாதவாறு தகுதியும் பதவிக்கு பொருத்தமும் இல்லாதவர்கள் என்று கருதப்படுபவர்கள் அதிபர் தேர்தல் களத்தில் காணப்படுவது அமெரிக்க மக்களுக்கு பெரும்  விசனத்தை  ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவின் மிகப்பெரும் பணக்காரரும் பல கோடிக்கணக்கான டொலரை தனது தேர்தல் பரப்புரைக்கான தொலைக்காட்சி விளம்பரத்துக்கு செலவிட்டு வரும் அமெரிக்க  அரசியலுக்கு முற்றிலும் புதியவரான குடியரசுக்கட்சியின் வேட்பாளராக நியமனம் பெற்றுள்ள  டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்தும் சச்சரவுமிக்க கொள்கைகளையும் கருத்துக்களையும் வெளியிட்டே தேர்தலில் இறுதிப்படி வரை முன்னேறியிருக்கிறார்.

2016 நொவம்பர் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஆயத்தங்களின் போது குடியரசுக்கட்சியின்  சார்பில் போட்டியிடுவதற்கு 10 க்கும் மேற்பட்ட தற்போதைய மற்றும் முன்னாள் ஆளுநர்களும் முன்னாள் மற்றும் தற்போதைய செனட்டர்களும்  ஆர்வம் காட்டியிருந்தனர்.

நரம்பியல் மருத்துவ நிபுணரான பென் கிறெஸன் ஃபுளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த செனட்டர் மார்க்கோ றூபியோ   ஒஹியோ மாநில ஆளுநர் ஜோன் கஷிஷ் ரெக்ஸாஸ் மாநில ஆளுநர்  ரெட் குறூஸ் ஃபுளோரிடா மாநில முன்னாள் ஆளுநரும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோர்ஷ் புஷ்ஷின் சகோதரரான  ஜெப் புஷ் உட்பட பதினேழு போட்டியாளர்களுடன தொடங்கிய  குடியரசுக்கட்சியின் உட் கட்சித் தெரிவு  நடவடிக்கைகளில் 10 க்கும் மேற்பட்டவர்கள் முதல் கட்டத்திலேயே   போட்டியிலிருந்து விலகியிருந்தனர்.ஏனைய போட்டியாளர்களான  ஜெப் புஷ் - பென் கார்ஸன்- மார்க்கோ றூபியோ- ரெட் குறூஸ் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக விலகிக்கொள்ள இறுதியாக ஜோன் கஷிஷ் தமது விலகலை அறிவித்து டொனால்ட் ட்ரம்ப்பின்  வேட்பாளர் நியமனத்தை  இலகுவாக்கினார்.

எனவே அரசியலுக்கு புதியவரும் சச்சரவான கருத்துக்களை தொடர்ந்து வெளியிடுவதன் மூலம் அமெரிக்காவை மட்டுமின்றி முழு உலகத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் வெளிப்படையாக பேசும் 6 பில்லியன் டொலர்  சொத்து மதிப்பு கொண்டிருக்கலாம் என்று  கருதப்படும் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் அதி கூடுதல் செல்வத்துக்கு அதிபதி என்ற தகைமையோடு தேர்தலை எதிர் கொள்கிறார்.

அவரது செல்வச் செழிப்பின்  அடையாளங்கள் நியூயோர்க் நகரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வான் முட்ட உயர்ந்தும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்தும் விரிந்தும் கிடக்கின்றன.


உலகப்புகழ் பெற்ற ஸ்கைஸ்கெறப்பர் கோபுரம் - அதனை சூழ உள்ள குடியிருப்பு தொடர்மாடிகள் - ட்ரம்ப் பூங்கா – ட்ரம்ப் மாளிகை – ட்ரம்ப் பிளாஸா – ட்ரம்ப் உலக கோபுரம் உட்பட விளையாட்டரங்குகள் கலையரங்கள் சுற்றுலா சூதாட்ட விடுதிகள்   என்று நீண்டு செல்லும் அவரது முதலீட்டு பட்டியலில் புதிது புதிதாக கோர்க்கப்பட்ட அத்தனையும் அவரது மூலதனத்தினதும் மூளைவளத்தினதும் கூட்டுப்பிரசவங்கள்.


அமெரிக்க வர்த்தக முதலீட்டு உலகில் தலைசிறந்த எதிர்வு நோக்காளர் என்றும் ஒப்பீடில்லாத தரகர் என்றும் வியக்கப்படும் டொனால்ட் ட்ரம்புக்கு அமெரிக்க அதிபராகி வெள்ளை மாளிகையில் குடியேற வேண்டும் என்ற எண்ணம் இருந்ததை மக்கள் 2000ம் ஆண்டில் தெரிந்து கொண்டார்கள்.

வெளிவராத காரணங்களினால்  தேர்தலில் குதிக்காது  அப்போது  ஒதுங்கிக் கொண்ட ட்ரம்ப் கடந்த ஆண்டில் 2016  அதிபர் தேர்தலில் போட்டியிடும் விருப்பை வெளியிட்டார்.

அதி தீவிர வலதுசாரி......... விட்டுக்கொடுப்புகள் அற்ற தேசியவாதி.........வெளிப்படையாக பேசுபவர்....குறைவாக பேசி நிறைவாக செயற்படுபவர்..... . உலக மயமாக்கலுக்கு எதிரானவர்............; ஏகபோக அதிகாரத்துவவாதி போன்ற அடையாளங்களுடன் ட்ரம்ப் அரசியல் களத்தில் தோன்றினார்.

ராஜதந்திர அணுகுமுறையிலோ அரசியலிலோ  முன் அனுபவங்கள் எதுவுமற்று அரசியல் களத்தில் நுழைந்த ட்ரம்ப்  வெளிப்படையாக தெரிவித்த கொள்கைத்திட்டங்கள் எடுத்த எடுப்பிலேயே அவரை சச்சரவான அரசியல்வாதியாக இனம் காட்டியது.

முஸ்லீம்கள் நாட்டுக்குள் நுழைய  தடை  விதிப்பது  மெக்ஸிக்கோ எல்லையில் பெரும் தடுப்புச்சுவர் எழுப்புவது  போன்ற கடுமையான குடிவரவுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது போன்ற அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் 1860ம் ஆண்டிலிருந்து போட்டியிட்டவர்களில் எவரும் டொனால்ட் ட்ரம்ப் போல இருந்தது  கிடையாது.

போட்டியாளருடன் வன்மமாகவும் மூர்க்கமாகவும் தர்க்கித்த வேட்பாளரை அமெரிக்கத் தேர்தல் இதுவரை கண்டதில்லை.

ஏதிர் வேட்பாளர் தொடர்பான  இரகசியங்களை வெளிநாட்டு  சக்திகள்  வெளியிட வேண்டுமென்று கோரி அதிபர் தேர்தலில் அந்நிய சக்தியின் தலையீட்டை விரும்பிய வேட்பாளரை அமெரிக்கா இதுவரை அறிந்ததில்லை.

அமெரிக்க கப்பல்களை நெருங்கினால் போரை அறிவித்து பாரசீக கடலிலேயே எதிரிக்கப்பல்கள் துவம்சம் செய்யப்படும் என்று  எந்த வேட்பாளரும் இதற்கு முன்னர் தேர்தல் வேளையில் எச்சரித்திருந்ததில்லை.

நாட்டின் கணிசமான மக்கள் தொகையும் தேர்தல் முடிவை தீர்மானிக்கும் ஆற்றல் கொண்ட மக்கள் கூட்டத்தை வன்முறையாளர்கள்  என்றும் போதைப்பொருள் கடத்தல் காரர்கள் குற்றவாளிகள் என்று கூறியது மட்டுமின்றி அந்த அயல் நாட்டின் செலவிலேயே குடியேற்றத்தை தடுக்கும் எல்லைச்சுவர் கட்டப்போவதாக கூறி தேர்தலை எதிர்கொள்ளும் வேட்பாளர் கடந்த 150 ஆண்டுகால அமெரிக்க தேர்தல் வரலாற்றுக்கு  முற்றிலும் புதிது.


தனது கருத்துக்களால்  உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும பரபரப்பை ஏற்படுத்திவரும் ட்ரம்ப் குடியரசுக்கட்சியின் வேட்பாளர் நியமனத்தை வென்ற கணத்திலிருந்து அமெரிக்க தேர்தல்களத்தில் காட்சி மாறத்தொடங்கியது.


வெள்ளை மாளிகைக்கும் இவருக்கும் வெகுதூரம் என்ற விமர்சனங்களோடு முகம் காட்டிய ட்ரம்ப் வெற்றி வாய்ப்பை நிச்சயம் என்று எண்ணியிருந்த ஹில்லறி கிளின்ரனை பின் தள்ளக்கூடியவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்.


அமெரிக்காவும் உலகமும் நன்கு அறிந்த ராஜதந்திரியும் ஏற்கனவே வெள்ளை மாளிகை வாசம் புரிந்திருந்தவருமான ஹில்லறி கிளின்ரன் பிரகாசமான வெற்றி வாய்ப்போடு  உற்சாகமாக போட்டியில் குதித்திருந்த போதிலும் வெள்ளை மாளிகை மறுபிரவேசத்துக்கான  வாய்ப்பு மங்கலடைந்து செல்வதையே அண்மைக்கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன
அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர்  என்ற பெருமையை தட்டிக்கொள்ளக் கூடிய வாய்ப்புக் கொண்ட ஹில்லறி கிளின்ரன் 1993ம் ஆண்டு  முதல் 2001ம் ஆண்டு வரை அமெரிக்காவின் 'முதல் பெண்மணி' என்ற கௌரவத்தோடு  வெள்ளை மாளிகையை ஏற்கனவே நிர்வகித்திருந்தவர்.

இதற்கு முன்னரும் வெள்ளை மாளிகைக்குள் இன்னொரு தடவை வாழ்ந்துவிட  வேண்டுமென்ற திட்டத்தோடு  கடந்த 2012ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட  முயற்சித்தும் உட்கட்சித்தேர்தலில் பராக் ஓபாமாவிடம் தோல்வி கண்டிருந்தார்.


அமெரிக்க அதிபர் தேர்தலில் தொடக்க கட்டத்தில்  வெற்றி வாய்ப்பு கொண்டவராக கருதப்பட்ட  ஹில்லறி டயன் றொடம் கிளின்ரன்  பன்முக ஆற்றல் கொண்ட பெண்மணியாக  அரசியலிலும் பொது வாழ்விலும் வலம் வருகின்ற போதிலும்  அமெரிக்காவின் முன்னாள் அதிபரின் துணைவியாகவும் அதாவது  நாட்டின் முதல் பெண்மணியாகவே அதிகம் அறியப்பட்டவர். 


இளமைக்காலம் முதல் சமூக சேவையாளராக அடையாளங் காணப்பட்டிருந்ததோடு  அமெரிக்காவின் 100 அதி சிறந்த  வழக்கறிஞர்களுள் ஒருவராக இரண்டு தடவைகள் மதிப்பளிக்கப்பட்டார்.


குழந்தைகளின் பராமரிப்பு விவகாரங்களிலும் சுகாதார சேவைகளிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகவே  இருந்திருக்கிறது.


அமெரிக்க அரசியல் சில காலம் சச்சரவை ஏற்படுத்தியிருந்த கிளின்ரன் சுகாதாரத் திட்டம் இவரது முக்கிய பங்களிப்போடு உருவாக்கப்பட்டதென்பதும்  அரச குழந்தைகள் காப்புறுதித் திட்டம் (State Children's Health Insurance Program), தத்தெடுத்தல் மற்றும் பாதுகாப்பான குடும்பத்திட்டம் ( Adoption and Safe Families Act) போன்றவை  இவரது முயற்சியில்  உருவான  வெற்றிகரமான திட்டங்களே.


இவ்வாறான பொது நலத்திட்டங்களின் பின்னணியில் செயற்பட்டிருந்ததனாலும் ஒபாமா நிர்வாகத்தில் அதி முக்கியமான ராஜாங்க அமைச்சு பதவியை வகித்திருந்தாலும் அமெரிக்காவுக்கு தலைமை தாங்குவதற்கு ட்ரம்ப்பை விட ஹில்லறி கிளின்ரனுக்கே தகுதி அதிகம் என்று ஜனநாயக கட்சி வட்டாரங்களும் ஏனைய மூன்றாம் உலக நாடுகளும்  திருப்தி கொள்கின்றன.
ஹில்லறி கிளின்ரனை பொறுத்தவரையில் ஆரம்பத்தில் இலகுவாக காணப்பட்ட தேர்தல் களம் காலம் கடந்து செல்லச் செல்ல இறுகிச் செல்லுவதை  துல்லியமாக  அவதானிக்க முடிகிறது.
 
வேர்மண்ற் மாநில செனட்டரும் அமெரிக்க நிதி மற்றும் வெளிவிவகார கொள்கைகளில் பழுத்த அனுபவமும் கொண்ட பேர்ணி சன்டெர்ஸ் ஹ்ல்லறி கிளின்ரனை  மிக கடுமையாக விமர்சித்து ஜனநாயக கட்சியை இரண்டாக பிளவு படுத்தியிருந்தார். இதுவே ஹில்லறி கிளின்ரனின் இறங்கு முகத்தின் தொடக்கப்புள்ளி.

ஹில்லறி கிளின்ரன் அமெரிக்காவுக்கு தலைமை தாங்கும் நிலை ஏற்பட்டால் அமெரிக்கா  பெரும் அழிவுப்பாதையில் செல்லுவது தவிர்க்க முடியாது என்று ஜனநாயக கட்சியின வேட்பாளர் தெரிவுக்கான போட்டியின் போது கூறி வந்த பேர்ணி சண்டர்ஸ் தற்போது ஹில்லறி கிளின்ரனை ஆதரிப்பதாக நேசக்கரம் நீட்டியிருக்கின்ற போதிலும் அவரது ஆதரவாளர்களோ ஹில்லறி கிளின்ரனை அதிபராக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

அதிபர் தேர்தலுக்கான கட்சிகளின் வேட்பாளர் நியமனத்தை பெறுவதில் குடியரசுக்கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் பெரும் சவால்களை எதிர்கொள்ளுவார் என்ற தேர்தல் அரங்கத்தின் திரை விலகிய போது எதிர்பார்க்கப்பட்ட போதிலும் வியப்புக்குரிய வகையில் ட்ரம்ப் அதனை இலகுவாக்கி வெற்றி வாய்ப்புக்கு மிக அருகில் காணப்பட்ட ஜனநாயக கட்சி மிக நெருக்கமாக அண்மித்து தேர்தல் முடிவை எதிர்வு கூற இயலாத நிலைக்கு தள்ளியிருக்கிறார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மக்களையும் ராஜதந்தரிகளையும் வெகுவாக நோகடித்திருந்த கொள்கைத்திட்ட அறிவிப்புகளில்  சமரசங்களை ஏற்படுத்தி  காயங்களை ஆற்றுப்படுத்தும் நகர்வுகள் மூலமே இலக்கை எட்டமுடியும் என்று ட்ரம்ப் சிந்திக்கத் தலைப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.   


தென் அமெரிக்க குடியேறிகளான மெக்ஸிக்கோ பிறேஸில் கியூபா மற்றும் லத்தீன அமெரிக்க நாடுகளிலிருந்து குடியேறி அமெரிக்க நாட்டவர்களாக வாழுபவர்கள் மொத்த குடிமக்கள் தொகையில் 17 வீதமாக உள்ள நிலையில் அவர்களை  பாலியல் வன்முறைக் குற்றவாளிகள் என்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்றும் வெளிப்படையாக விமர்சித்து அவர்களது வெறுப்பை சம்பாதித்திருக்கும் அதேவேளை கறுப்பின மக்களை அவமதித்தும் அமெரிக்காவின் ஒட்டு மொத்த பெண்களினதும் வெறுப்பை சம்பாதிக்கும் வகையில் ஆவேசமான கருத்துக்களை கொட்டியதாலும்  கள நிலை அவருக்கு முற்றிலும் எதிராகவே காணப்பட்டது.


ட்ரம்பை அதிபர் வேட்பாளராக தெரிவு செய்யும் பட்சத்தில் குடியரசுக்கட்சி அதள பாதாளத்தில் வீழ்ச்சியடைந்து விடும் என்று சொந்த கட்சியே கருத்துப்பிளவுகளில் மோதுண்டது.
லத்தீன் அமெரிக்க பிரதிநிதிகள் கறுப்பின மக்கள் ஆசிய அமெரிக்க மக்கள் செறிந்து வாழும் மாநிலங்களில் எல்லாம் ட்ரம்புக்கு எதிரான அலை மிக வீரியத்துடன் வீசியது. 

அரசியலுக்கு அப்பாற்பட்டவராக  பணம்  குவிக்கும் தொழிலதிபராகவே அறியப்;பட்டிருந்த டொனால்ட் ட்ரம்பின்  அரசியல் கள எழுச்சிக்கு  « அமெரிக்கர்கள் முதலில் » என்ற அவரது அறிவிப்பு முதல் சுழியிட்டது.     

பூகோள அரசியலில்  ஏகபோக வல்லாதிக்க சக்தியாக எதிலும்  முதலில் இருந்த அமெரிக்கா அண்மைக்காலத்தில்  அந்த மதிப்பை இழந்து விட்டதாகவும் குமுறிய ட்ரம்ப் அமெரிக்கா  இழந்த மதிப்பை மீண்டும் பெற்றுக் கொடுத்து அதனை முதலிடத்தில்  திரும்பவும் நிறுத்துவதே தமது முதல் கடமை என்கிறார்.

ட்ரம்பின் அறிவிப்பு ஒரு பகுதி அமெரிக்கர்களை கவர்ந்து ஈர்க்கவும் செய்தது என்பதையும் மறுப்பதற்கில்லை. அமெரிக்க அரசியலில் விசனம் கொண்டு  நீண்ட காலமாக மௌனம் காத்துவரும்  அமெரிக்கர்களின் குரலாக ட்ரம்ப் ஒலிப்பதாகவும்  விமர்சனங்கள் வெளியாகின.

எனினும்  « அமெரிக்கா முதலில் »  என்ற ட்ரம்பின் கொள்கை  அதன் தோழமை நாடுகளை ஒதுக்கும் திட்டம் என்றும் ஏனைய நாடுகளை அச்சுறுத்தும் எண்ணம் கொண்டது என்றும் எதிரலைகள் எழுந்தன.

அமெரிக்கா முதலில் என்ற கோஷத்துக்கு தற்போதைய உலகில் எந்த அர்த்தமும் கிடையாது என்று முதலில் ஜேர்மனி கொதித்தது. 

இரண்டாம் உலகப்போரின் பின்னரான உலக பாதுகாப்பு கட்டமைப்பு நிறைய மாறியிருப்பதாகவும் அது ஒன்றிரண்டு தூண்களின் மீது மட்டுமோ அன்றி ட்ரம்ப் கருதுவது போல தன்னந்தனியாகவோ கட்டியமைக்கப்பட முடியாது என்று  ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சரும் பழுத்த அரசியல்வாதியுமான ஃபிராங் வோல்ற்ரர் ஸ்ரெய்ன்மெயர்  பதிலடி தருகிறார்.


அமெரிக்க தேர்தல்  நடைமுறைக்கு  சாத்தியமான கருதுகோள்களை கொண்டிருக்கவில்லை என்றும் அவர் சாடுகிறார்.


கூட்டாளி நாடுகளின் ஜனநாயக உரிமைகளை மறுப்பதன் மூலம் அவற்றையும் ஒட்டுமொத்தமாக தனிமைப்படுத்த ட்ரம்ப் எத்தனிப்பதாக சுவீடனின் முன்னாள் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான கார்ல் பில்டற் கூறுகிறார்.


ட்ரம்ப் அதிபராக தெரிவானால் அவரே உலக நாடுகளில் இருந்து  தனிமைப்படுத்தப்பட்ட அமெரிக்க தலைவராக இருப்பார் என்று எதிர்வு கூறும் தென்கொரியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கொரிய  பல்கலைக்கழக அரசியல் துறை பேராசிரியருமான   கிம் சுங் கான் உலகமெங்கும் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் வெடிப்பதற்கு  ட்ரம்பின் அரசியல் போக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கிறார்.


அமெரிக்க ஐரோப்பிய உறவிற்கு ட்ரம்பின் தெரிவு பாதகமாக அமையும் என்று பெல்ஜியமும் தெரிவித்திருக்கும் நிலையில் அமெரிக்க தேர்தல் களம் வேறொரு திசையில் பயணிக்கிறது.


முஸ்லீம்களை அமெரிக்காவுக்குள் நுழைவதை தடைசெய்ய வேண்டும் என்ற  ட்ரம்பின் கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் அருவருப்பான வெறுப்பை உமிழும் அவர் எரிகின்ற நெருப்புக்கு எண்ணை வார்க்கும் வகையில் நடந்து கொள்வதாக அரபுலகம் குற்றஞ்சாட்டியதையும் ஒட்டு மொத்த இஸ்லாம் சமூகமும் அவரை இன மத வெறியர் என்று அடையாளமிட்டு வெறுக்க முற்பட்டதன் விளைவை வெகு விரைவாகவே ட்ரம்ப் புரிந்து கொண்டிருக்கிறார்.


முஸ்லீம்களை தடைசெய்யவேண்டும் என்பது ஒரு யோசனையே  என்று தனது திட்டத்தையே மட்டமிடும்  அலகினால் வரையறையிட்டு பின்வாங்கியதை கலைந்து செல்லும் ஆதரவுக்கூட்டத்தை  மீண்டும் கூவியழைககும் நகர்வாகவே கொள்ள முடியும்.


லத்தீன் அமெரிக்க மக்களினதும் கறுப்பினத்தினரதும்  அதிருப்தியை பெரிதும் சம்பாதித்திருக்கும் ட்ரம்ப் தேர்தல் களத்தில் தோன்றிய போது  மூன்றில் ஒரு பங்கு  (67 வீதமான) அமெரிக்க மக்கள் அவரை நிராகரித்திருந்தனர்.
ஹில்லறி கிளின்ரனை 54 வீதமானவர்கள் மறுதலித்திருந்தார்கள்.


அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியாளர்கள் இருவரையுமே நாட்டில்  பாதிக்கும் மேற்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்த முதலாவது தேர்தலாக இது அமைகிறது.


மோசமானதில் ஒன்றை தெரிந்தெடுக்க வேண்டிய கட்டாயத்துள்ளாகியிருக்கும் அமெரிக்க மக்களின் மன நிலை வெகுவாக மாறிச்செல்வதை தற்போது அவதானிக்க முடிகிறது.


தொடக்கத்தில் 69 வீதமான மக்களால் நிராகரிக்கப்பட்ட ட்ரம்ப் மீதான வெறுப்பு குறைவடைந்து தற்போது 46 வீதமான ஆதரவை கொண்டிருப்பதாக கணிப்புகள் கூறுகின்றன.


மாறாக  அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் ஹில்லறி கிளிரனுக்கு இருந்த ஆதரவு தற்போது குறைவடைந்திருப்பதையும் கணிப்புகள் காட்டுகின்றன.
ஹில்லறி கிளின்ரனுக்கு மக்கள் செல்வாக்கு ட்ரம்பை விட  தொடக்கத்தில் ஆதரவு  அதிகம் காணப்பட்டிருந்த போதிலும்  கடந்த 30ஆண்டுகளில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல்களில் மிக கூடுதலானவர்களால்  நிராகரிக்கப்படும் வேட்பாளராகவே அவர்  காணப்படுகிறார்.


மக்களால் விரும்பப்படாதவர் என்பதோடு நம்பகத்தன்மையற்ற அரசியல்வாதியாகவும் அவர் நோக்கப்படுகிறார்;.

அமெரிக்க ராஜாங்க தொடர்பாடல்களுக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்திய விவகாரம் அவரது செல்வாக்கின் சரிவுக்கு மற்றொரு காரணமானது. ஆளுமைக்குறைபாடு மற்றொன்று.

இரண்டு தடவைகள் அதிகாரபீடத்தில் அவரை அவதானித்து மக்கள்  சலிப்படைந்ததன் விளைவும் அவருக்கு எதிரானவை.


மேற்குலகை திணறடித்து வரும் ஐ எஸ் அமைப்பின் அதீத வளர்ச்சியும் மனித நேயத்துக்கு சவாலாக மாறி முடிவு காண இயலாத மற்றொரு நெருக்கடியாக தீவிரமடைந்துள்ள சிரிய விவகாரமும் ஹில்லறி கிளின்ரனின் ராஜதந்திர தோல்வியாகவே நோக்கப்படுகிறது.

இறுதியாக நியூயோர்க்கில் நடைபெற்ற இரட்டைக்கோபுர தாக்குதல் நினைவு நிகழ்வுகளின் போது உடல் தளரவுற்று சோர்வடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து நாட்டை நிர்வகிப்பதற்கு அவருக்குரிய திடகாத்திரம் குறித்து  மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் பலமான ஐயப்பாடே ஹில்லறி கிளின்ரனின் ஆதரவு தொடர்ந்து சரிவதற்கான அண்மைக்காரணமாதக சுட்டமுடியும்.

மறுபுறத்தில் குடியரசுக்கட்சிக்குள் நிலவிய கருத்து வேறுபாடுகளை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்த ட்ரம்ப் இரண்டு தடவைகள் கை நழுவிப்போன அதிகாரத்தை மீளவும் குடியரசுக்கட்சி  கைப்பற்ற வேண்டும் என்ற கோட்பாட்டுக்; குடையை  அகல விரித்து கருத்து வேறுபாடு கொண்டவர்களையும் அரவணைத்து வருகிறார்.

குடியரசுக்கட்சியன் உட்கட்சித்தேர்தலில் போட்டியிட்ட போது ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்தது மட்டுமின்றி ட்ரம்பை வேட்பாளராக அறிவித்த குடியரசுக்கட்சியின் மாநாட்டில் அவருக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்திருந்த லத்தீன் அமெரிக்க மக்களிடம் கணிசமான செல்வாக்கை கொண்டிருக்கும் ரெட் குறூஸ் தற்போது ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்திருப்பது இன்னொரு குறிப்பிடத்தக்க காட்சி மாற்றம்..

அமெரிக்க படைத்துறையில் நன்கு மதிக்கப்படும் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் மிகுந்த  அனுபவமிக்க முன்னாள் தளபதிகள் ஒன்று சேர்ந்து ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்திருப்பது விறுவிறுப்பான காட்சி மாற்றம்.
 
ஹில்லறி கிளின்ரன்  ஒட்டு மொத்த பெண் வாக்காளர்களில் 55 வீதமானவர்களின் ஆதரவோடு லத்தீன் அமெரிக்க கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க மக்களின் ஆதரவையும் கூடுதல் பலமாக கொண்டிருக்கிறார்.


ஆனால் பெண்களினதும் லத்தீன் அமெரிக்க ஆசிய அமெரிக்க கறுப்பின மக்களினது  ஆதரவின்றி அதிபர் பதவியை எட்டமுடியாத என்ற யதார்த்த விதி நடைமுறையில் உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் இவை அனைத்துமே தமக்கு எதிராக உள்ளதை புரிந்து கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

மாபெரும் தொழில் சாம்ராஜயத்தை கட்டியமைப்பதற்கு  தான் பிரயோகித்த அத்தனை குயுக்திகளையும் தந்திரோபாயங்களையம் ட்ரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றியடைவதற்கு  பிரயோகித்து வருகிறார்.


ஹில்லறி கிளின்ரனின் கணவரும் முன்னாள் அதிபர் பில் கிளின்ரனுடன் மிக நெருக்கமாக பேசப்பட்ட ஜெனிபர் ஃபிளவர்ஸூக்கு நேரடி விவாதத்தை முன்வரிசையில் அமர்ந்திருந்து பார்வையிடுமாறு அழைப்பு விடுத்ததையும் அதனை ஜெனிபர் ஏற்றுக்கொண்டதையும்  விவாதத்தின் போ ஹில்லறி கிளின்ரனை உளவியல் ரீதியாக தடுமாறச்செய்யும் நகர்வு என அமெரிக்க ஊடகங்கள் வர்ணிக்கின்றன. 


போட்டியாளர்களின் தேர்தல் வியூகங்களின் விளைவாக தேர்தல் மிக அதிகப்படியான புள்ளிகள் வேறுபாட்டோடு முன்னணியில் காணப்பட்ட ஹில்லறி கிளின்ரனின் பலத்தை  ட்ரம்பின் ஆதரவு காட்டி  சரிசமனாக  எட்டிப்பிடிப்பதற்கு  தேர்தல் களத்தில் காட்சிகள்  அடுத்தடுத்து மாறியிருக்கின்றன.


நொவம்பர் 8ம் தேதி வாக்களிக்க  இருக்கும் அமெரிக்க மக்களில் இதுவரை ஆதரவு  எவருக்கு என்பதை தீர்மானிக்காத  2 கோடியே 40 லட்சம் வாக்களார்களை தம்வசப்படுத்துபவருக்கே வெள்ளைமாளிகையின் திறவுகோல் என்ற நிலையில் அந்த திருப்பம் வாய்ந்த நிகழ்வான இரு வேட்பாளருக்கும் இடையேயான நேரடி முதல் விவாத அரங்கின் திரை 26.09.2016 அன்று  திங்களன்று இரவு விலகுகிறது.


கோடிக்கணக்கான மக்களின் முடிவில் மாறுதலை ஏற்படுத்தப்போகும்  இந்த விவாதத்தின் போது பொதுவாழ்க்கையில் தனது சாதனைகளை பட்டியலிட வேண்டிய அவசியம் ஹில்லறிக்கு கிடையாது.


ஏனெனில் உலகறிந்த அரசியல்வாதியான அவரால் அதிபராக எவற்றையெல்லாம் சாதிக்க முடியும் என்பது வரைறுக்கப்படுவதே  எதிர்பார்க்கப்படுகிறது.


விவாதத்தின் போது அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்த வேண்டிய தேவையும் தனது கவர்ச்சிகரமான சச்சரவுமிக்க அறிவிப்புகளை எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும் என்பது குறித்து மக்கள் மத்தியில்  நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டிய சவால் ட்ரம்ப் முன்னாள் உள்ளது. 


அமெரிக்காவும் உலக மக்களும் ஆவலோடு காத்திருக்கும்  இந்த விவாதத்தில் அமெரிக்காவை மீண்டும் உலக அரங்கில் தனித்துவமான பாதுகாப்பான நாடாக நிலைநிறுத்துவதற்கு தன்னால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடம் விதைப்பதில் வெற்றி காணமுடியும் என்று ட்ரம்ப் தெளிவாக உள்ளார்.


பொது வாழ்வில் ஏற்கனவே அனுபவம் கொண்ட  ஹில்லறி  கிளின்ரன் தான் இழந்திருக்கும் நம்பகத்தன்மையை தூக்கி நிறுத்துவதற்கு இந்த விவாதங்களை தகுந்த முறையில் பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.


அமெரிக்க அதிபராவதற்கான  ஆளுமை தகுதி தகைமை எதனையுமே கொண்டிராது தேர்தல் களத்தில் புகுந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் இருவருக்குமே மிகததிறமையாக  சோபிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
முதலாவது விவாத அரங்கின் போக்கும் தொடர்ந்து நடைபெற இருக்கும் இரண்டு நேரடி விவாதங்களின் பெறுபேறுமே தேர்தல் முடிவை  தீர்மானிக்கும்.


உதடுகளிலிருந்து வெளிப்படும் ஒரு வார்த்தை கூட விவாதத்தின் பெறுபேற்றை மாற்றிவிடக்கூடிய அபாயம் கொண்டது இந்த அமெரிக்க அதிபர் தேர்தல் நேரடி விவாதம்.
1860 ஆண்டு முதல் அமெரிக்கா எதிர்கொண்ட தேர்தல்களில் மிகக்கடினமான தேர்தலாக மாறியிருக்கும் தேர்தலில் தற்போது தென்படும்  காட்சி மாற்றத்தை இந்த விவாதம் உறுதி செய்யுமா?.

 

அனுப்புக Home, World News, Articles
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 

 

 

 

 
.