செய்திகள்

இணைப்புக்கள்

உங்கள் அபிப்பிராயங்கள்

News Articles

29 வருடங்களின் பின்னரும் உயிர்த்திருக்கும் திலீபனின் கோரிக்கைகள்!

 

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

29 வருடங்களின் பின்னரும் உயிர்த்திருக்கும் திலீபனின் கோரிக்கைகள்!

 

பசி
 
எரியும் அனலில் 
தேகத்தை உருக்கி
உயிரால் பெருங்கனவை எழுதிய 
ஒரு பறவை
அலைகிறது தீராத் தாகத்தில் 
 
ஒரு சொட்டு நீரில் உறைந்த 
நிராகரிக்கப்பட்ட ஆகுதி
வேள்வித் தீயென மூழ்கிறது
 
சுருள மறுத்தது குரல்
அலைகளின் நடுவில் உருகியது ஒளி
 
உறங்கமற்ற விழியில் பெருந்தீ
இறுதிப் புன்னகையில்
உடைந்தது அசோகச் சக்கரம்
 
எந்தப் பெருமழையாலும்
தணிக்க முடியாத அனலை
இன்னமும் சுமந்து திரிபவனுக்காய்
ஒருநாள்
எழுமொரு நினைவுதூபி 
வந்தமரும் ஒரு பறவை
நிறைந்திருக்கும் பூக்கள் 
 
தணியும் அவன் பசி. 
 
தீபச்செல்வன்
25.09.2015 

இன்று செப்டம்பர் 26. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய போராளிகளில் ஒருவரான தியாகி திலீபனின் நினைவுநாள். ஒவ்வொரு ஆண்டும் திலீபன் தியாகச் சாவடைந்த நாளை நினைவுநாள் தவிர்க்க முடியாது நினைவுக்கு வருகிறது. சின்ன வயதில் இடம்பெயர்ந்து வீடுகளே இல்லாத நாட்களில்கூட திலீபனின் தியாகத்தை நினைவுகூர்ந்தோம். 1995இற்கு முன்பாக ஒரு வருடத்தில், அதுவும் ஒரு நாவற்பழக்காலம் வீட்டின் முன்பாக உள்ள நாவல் மரத்தின் கீழ் எங்கேயோ வாங்கி வந்த திலீபனின் படத்தை கொண்டு வந்து தீபம் ஏற்றிய நினைவு இப்பொழுதும் அந்த நாவல்மரத்தின் கீழிருக்கிறது. 

இடம்பெயர்ந்து ஸ்கந்தபுரத்தில் இருந்த பொழுது எங்களுக்கு வசிக்க வீடே இருக்கவில்லை. ஒரு மர நிழலில் வாழ்ந்துகொண்டிருந்தோம். அப்பொழுதும் திலீபனின் நினைவுநாள் வந்தது. ஒரு துணியால் சிறிய கூடாரம் அமைத்து அதற்குள் திலீபனின் திருவுருவப்படத்தை வைத்து அதற்கு பன்னிரண்டு நாட்களாக தீபம் ஏற்கிக் கொண்டிருந்தேன். சிறுவர்களாக இருந்த போது திலீபனின் நினைவுநாட்களில் அவரைக் குறித்த நாகடங்கள், பேச்சுக்கள், கவிதைகள் என்று நிகழ்த்தி அவரது தியாகச் சாவை நினைகூர்ந்தோம். 

பாடசாலையில் திலீபன் நினைவு நாட்களில் பிரதான வாசலில் அவரது நினைவுநாட்களைக் குறித்த பதாகை ஒன்றை நடுவோம். காலை வணக்க நிகழ்வில் திலீபனுக்காக மலர் தூவி, தீபம் ஏற்றி வணங்குவோம். புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னிப் பெருநிலம் இருந்த காலத்தில் திலீபனின் தியாகம் வன்னி முழுவதும் நினைவகூரப்படும். சமாதான காலத்தில் யாழ்ப்பாணம் போன்ற அரச கட்டுப்பாட்டு இடங்களிலும் அவரை நினைவுகூறுவார்கள். 

அகிம்சை என்பது என்ன என்பதை உலகத்திற்கு எடுத்துரைத்தவர் திலீபன். இந்தியாவிற்கு அகிம்சைப் போராட்டத்தின் வழியாக காந்தி விடுதலையைப் பெற்றுக் கொடுத்தார் என்று மகாத்மா காந்தியை அழைப்பதுடன் காந்தி தேசம் என இந்தியாவை அழைக்கிறார்கள். அதே இந்தியாவுக்கு எதிராகவே திலீபன் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கை வந்த இந்திய அமைதிப்படையினரிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து தியாகி திலீபன் உண்ணா விரதத்தை மேற்கொண்டார். 

ஈழத்தின் யாழ்ப்பாணம் ஊரெழுவைச் சேர்ந்த திலீபன் நவம்பர் 27, 1963 அன்று பிறந்தார். பார்த்திபன் இராசையா என்ற இயற்பெயரை உடைய திலீபன் புலிகளின் ஆரம்பால முக்கிய உறுப்பினராவார். 1987 செப்டம்பர் 15ஆம் திகதி தனது உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்து 1987 செப்டம்பர் 26 அன்று காலை 10.48 மணிக்கு மரணத்தை தழுவினார். யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபனுக்கு மரணத்தின் பின்னர், புலிகள் லெப்டினன் கேணல் திலீபன் எனும் நிலையை வழங்கியிருந்தனர். 

திலீபனின் ஐந்து அம்சக் கோரிக்கைகள்: 

1.மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2.சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3.அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

4.ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5.பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

அகிம்சைப் போராட்டத்தின் மூலம் சுதந்திரத்தைப் பெற்றாக கருதப்படும் இந்திய தேசம் திலீபனின் அகிம்சைப் போராட்டத்தை மதிக்கவில்லை. பன்னிரண்டு நாட்கள் ஒரு துளி நீர்கூட அருந்தாமல் உண்ணவிரதம் இருந்தார் திலீபன். அகிம்சை என்பது மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படாமல் அல்லது மற்றவர்களை தண்டிக்காமல் தம்மை வருத்தி முன்னெடுக்கும் ஒரு போராட்டம். காந்தி இந்த அறவழிப் போராட்டத்தையே இந்திய சுகந்திர விடுதலையை வென்றெடுக்கப் பயன்படுத்தினார். 

ஆனால் இந்திய விடுதலைப் போராளி பகத்சிங்கிற்கு தூக்குத் தண்டணையை ஆங்கிலேயர்கள் வழங்க முடிவுசெய்ய பொழுது தண்டனைக்கான பத்திரத்தில் காந்தி ஒப்பமிட்டதாகவும் அகிம்சையை பின்பற்றுபவர் எப்படி இம்சையை ஆதரிப்பது எனவும் கேள்வி எழுப்படுகிறது. திலீபனின் உண்ணா விரத அறப் போராட்டத்திலும் இந்தியா திலீபனுக்கு மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் இம்சையையே பரிசளித்தது. உலகத்தில் நடந்த அகிம்சைப் போராட்டங்களில் திலீபனின் போராட்டம் ஒரு உன்னதப் போராட்டமாக கருதப்படுகிறது.  

இந்த உலகத்தில் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எண்ணிவிட முடியாது. பல்வேறு தேவைகளுக்காக பலரும் உண்ணா விரதம் இருக்கிறார்கள். அலுவலகத்தில் சம்பள உயர்வு, கட்சியில் பதவி கோரி, அடிப்படைத் தேவைகளை கேட்டு என்று பல்வேறு காரணங்களுக்காக பலரும் உண்ணா விரத்தில் பலர் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியலில் உண்ணா விரதம் என்பது ஒரு தந்திரம். நான் உங்களுக்காக உண்ணாவிரதம் இருந்தேன் என்று சொல்லிக் கொண்டு பலரும் வாக்குகளை கேட்க வருவதைப் பார்த்திருக்கிறோம். பெரும்பாலான அரசியல்வாதிகளின் பின்னால் உண்ணா விரதத்தின் வரலாறு இருக்கும். 

ஆனால் அது போலியான உண்ணா விரதம். பலர் உணர்ச்சி வசப்பட்டு முன்பின் யோசிக்காமல் உண்ணா விரத்திற்கும் செல்வதும் பின்னர்  உண்ண விரம் இருந்து சில மணிநேரங்களில் எப்படியாவது அதை கைவிட்டு பழரசம் அருந்துகிறார்கள். இவர்கள் யாரும் உண்ணவிரதம் இருந்து உயிரை துறக்கவில்லை. 

பான்கிமூன் நியமித்த மனித உரிமைகள் தொடர்பான நிபுணர் குழுவை கலைக்க வேண்டும் என்ற ஐ.நாவுக்கு எதிராக விமல் வீரவன்ச உண்ணா விரத நாடகம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். திலீபனுடைய உண்ணாவிரதத்தையும், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவினுடைய உண்ணாவிரதத்தையும் ஒப்பிட்டு சிங்களக்கவிஞரும் எழுத்தாளருமான புலஸ்தி இப்படி எழுதியிருக்கிறார். 

“இலங்கையில் இதுவரையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிரிழந்த ஒரே நபர் திலீபன் மட்டுமே. திலீபனின் உண்ணாவிரதமானது விளம்பரத்துக்காகச் செய்யப்பட்ட ஒன்றல்ல. ஆனால் விமலினுடையது விளம்பரத்துக்கானது. திலீபன் மரணம் நிச்சயம் என்பதை முழுதாக ஏற்றுக் கொண்டு உண்ணாவிரதத்தில் இறங்கியவர். ஆனால் விமல் சாவை எதிர்பார்க்கவேயில்லை. திலீபன் உண்மையிலேயே விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் விமல், மஹிந்தவிடம் தானும் இருக்கிறேனெனக் காட்டிக் கொள்வதற்காக உண்ணாவிரதம் இருந்தார். திலீபனுக்கு சாவின் மூலமாக கைவிட்டுச் செல்ல ஏதுமில்லை. ஆனால் விமலுக்கு பணம், மாளிகைகள், வாகனங்கள், அரசியல் எனப் பல உண்டு. இந் நிலையில் அவர் உண்மையில் சாக விரும்புவாரா? திலீபனுக்கு உண்ணாவிரதமென்பது தனது அரசியல் எதிர்ப்பைக் காட்டும் ஒரு ஆயுதம். ஆனால் விமலுக்கு தனது வியாபாரத்தை விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஒரு நாடகம்.” 

திலீபன் அப்படி ஒரு முடிவை எடுத்தார் என்றால் அதற்கு அடிப்படையானது ஈழ மண்ணின் வரலாறும் நிலவரமும்தான். தனது தேசம் தொடர்பிலும் மக்களின் விடுதலை தொடர்பிலும் திலீபன் என்ற போராளியிடம் காலம் உருவாக்கிய மனோதிடம் அவரை அத்தகையதொரு மரணப் போராட்டத்தை செய்யத் தூண்டியது. உண்ணா விரதப் போராட்டம் தொடர்பிலும் இந்திய அரசின் நிலைப்பாடு தொடர்பிலும் முழுமையான புரிதலுடன்தான் திலீபன் போராட்டத்தில் இறங்கினார். அதனால்தான் அகிம்சை தேசம் என்ற இந்தியாவின் முகத்திரையை கிழித்து அதன் இம்சை முகத்தை திலீபனால் அம்பலப்படுத்த முடிந்தது. 

ஒரு காலத்தில் திலீபனின் நினைவுநாட்களை பெருமெடுப்பில் நினைவுகூர்ந்த ஈழ மண் இன்று மௌனித்துக் கிடக்கிறது. திலீபனுக்காக தமிழர் தேசத்தில் எழுப்பட்டிருந்த நினைவுத்தூபிகள் எதையும் சிங்கள இராணுவத்தினர் விட்டு வைத்திருக்கவில்லை. ஏனெனில் திலீபன் என்ற குறியீடு வலிமை மிகுந்தது. அவரது போராட்ட வடிவம் இந்த உலகத்தை என்றும் கேள்விக்கு உள்ளாக்கியபடியிருக்கும். திலீபனின் சிலைகளுக்கும் படங்களுக்கும் தூபிகளுக்கும் அஞ்சிய இராணுவத்தினர் அவற்றை மெல்ல மெல்ல இரவோடு இரவாக அழித்து முடித்துவிட்டனர். திலீபனின் மனோ திடத்திலிருந்து வெளிப்பட்டவைதான் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுகந்திர தமிழீழம் மலரட்டும்” போன்ற கருத்துக்கள். நினைவுகளில் எழுப்பப்பட்ட திலீபனின் சிலைகளை படங்களை சித்திரத்தை யாராலும் அழிக்க முடியாது. திலீபன் தமிழ் மக்களிடத்தில் என்றும் மறக்க முடியாத ஒரு அற்புதப் போராளி.   

திலீபன் ஈழத் தமிழர்களின் ஒரு குறியீடு. திலீபனின் பசி என்பது மக்களின் பசி. திலீபனை இன்றும் நாம் நினைவு கூர வேண்டியிருப்பதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன. திலீபன் அன்று முன் வைத்த கோரிக்கைகள் இன்றும் இந்திய அரசை நோக்கி மாத்திரமன்றி இலங்கை அரசை நோக்கியும் எழுகின்றன. இருப்பதாறு வருடங்கள் கடந்துவிட்டன. அன்று தொடங்கி இன்னமும் ஈழத் தமிழ்களுக்கு ஒரு தீர்வில்லை. 

இன்னமும் ஈழத் தமிழர்களின் நிலங்களில் சிங்களவர்கள் திட்டமிட்டுக் குடியேற்றப்படுகின்றனர். பலர் இன்னமும் சிறைகளில் தவிக்கின்றனர். அன்று ஊர்காவல்படைகள் இன்று இராணுவப்படைகளே தமிழர் தாயகத்தில் நிறைந்துவிட்டன. பொலிஸ் நிலையங்களும் பெருகிவிட்டன. அன்று திலீபன் முன்வைத்த பிரச்சினைகள் இன்று உச்ச கட்டத்தை அடைந்துவிட்டன. 29 வருடங்கள் கடந்த பின்னரும் அகிம்சைக்கு தன்னை பலியிட்ட ஒரு ஈழப் போராளி திலீபனின் கோரிக்கைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை. 29 வருடங்கள் கடந்த பின்னரும் திலீபனின் பசி இன்னமும் தீராவில்லை!

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

அனுப்புக Home, Srilankan News, Articles
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 

 

 

 

 
.