NEWS

YOUR COMMENTS

News Articles

நல்லாட்சியில் தேனும் பாலும் ஓடுது என சொல்ல நான் முட்டாளும் இல்லை பொய்யனும் இல்லை - மனோகணேசன்

 

நல்லாட்சியில் தேனும் பாலும் ஓடுது என சொல்ல நான் முட்டாளும் இல்லை பொய்யனும் இல்லை - மனோகணேசன்

 

நல்லாட்சியில் தேனும் பாலும் ஓடுது , காணிகள் விடுவிக்கப்பட்டு உள்ளன , அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டு விட்டார்கள் , அரசியல் தீர்வு கிடைத்து விட்டது என்றெல்லாம் நான் பொய் சொல்ல மாட்டேன். அவ்வாறு சொல்ல நான் முட்டாளும் இல்லை பொய்யனும் இல்லை. என தேசிய சகவாழ்வு , கலந்துரையாடல் , மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். 

 
வடமாகண ஊடகவியலாளர்களுக்கான சகவாழ்வு மேம்பாட்டுக்கான செயலமர்வு கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆகிய தினங்களில் தேசிய சகவாழ்வு , கலந்துரையாடல் , மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

குறித்த செயலமர்வின் இறுதி தினமான திங்கட்கிழமை தேசிய சகவாழ்வு , கலந்துரையாடல் , மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் கலந்து கொண்டு  ஊடகவியலாளர்கள் மத்தியில் , கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் , 


சமத்துவம் ஏற்பட்டால் தான் ஐக்கியம் ஏற்படும்.

கடந்த ஆட்சி காலத்தின் போது தமிழ் மக்கள் தமது பிரச்சனைகள் , அபிலாசைகள் , வாழ்வாதார பிரச்சனைகள் தொடர்பில் கதைக்க முடியாத நிலை காணப்பட்டது. "பொது பலசேனா , ராவய எனும் பேரினவாத அமைப்புக்கள் , அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கி வந்தன.  ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. 

 
தமிழ் , சிங்கள , முஸ்லீம் மக்கள் தற்போது கலந்துரையாட கூடிய நிலைமை உருவாகியுள்ளது. அதன் ஊடாக பிரச்சனைகள் தீர்த்துக் கொள்ளப்படலாம் , என எதிர்பார்க்கிறேன். 
 
தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் மக்கள் தமக்கிடையில் கலந்துரையாட வேண்டும். அதன் ஊடாக ஒவ்வொருவரும் தமது பிரச்சனைகளை கூறவும் , மற்றவர்களின் பிரச்சனைகளை அறிந்து கொள்ளவும் முடியும். தற்போது தமிழ் மக்களின் பிரச்சனைகளை சிங்கள மக்கள் காது கொடுத்து கேட்கும் நிலை உருவாகியுள்ளது. 
 
கடந்த காலங்களில் துப்பாக்கி முனையிலும் வன்முறைகளின் மத்தியிலுமே கலந்துரையாடல்கள் இடம்பெற்றன தற்போது அந்த நிலை இல்லை. தற்போது துப்பாக்கிகளுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. 
 
சமத்துவம் ஏற்பட்டால் தான் ஐக்கியம் ஏற்படும். இல்லாவிடின் , ஆண்டான் அடிமை ஐக்கியமே ஏற்படும். சிங்களமும் , தமிழும் ஆட்சி மொழி , ஆங்கிலம் இணைப்பு மொழி , இதில் எந்த ஒரு மொழியும் , பெரிது இல்லை . ஒரு மொழியை விட மற்றைய மொழி தாழ்ந்ததும் இல்லை.
 
இலங்கையின் தேசிய கொடியில் உள்ள வாளேந்திய சிங்கம் , தமிழ் , முஸ்லீம் மக்களை பயமுறுத்தும் வகையில் , உள்ளது என சில தரப்பினரும் , இல்லை தமிழ் , முஸ்லீம் மக்களை பாதுகாக்கவே வாளுடன் உள்ளதாக இன்னொரு தரப்பும் கூறுகின்றது. சாதகமாக நோக்கினால் , சாதகம் பாதகமாக நோக்கினால் பாதகம். 
 
 நான் பலே கில்லாடி. 
 
கடந்த ஆட்சி காலத்தில் வெள்ளை வான் கடத்தல்கள் நடைபெற்றன. அதற்கு எதிராக நாம் குரல் கொடுத்தோம். அதற்காக பலதை இழந்தோம். எனது நண்பனான நடராஜா ரவிராஜ இழந்தேன். ரவிராஜ் கொல்லப்பட்டார். என்னையும் கொல்ல முயன்றார்கள். அவர்கள் கில்லாடி என்றால் நான் பலே கில்லாடி அதனால் என்னை கொல்ல முடியவில்லை.
 
என்னை கொல்ல முயற்சித்த போது எனது தாயார் என்னை வெளிநாட்டுக்கு தப்பி செல்லுமாறு கோரினார். அப்போது நான் தாயாரின் பேச்சை கேட்க வில்லை. நான் அவ்வாறு தப்பி சென்றால் என்னை நம்பி வந்தவர்களுக்கும் , என்னை நம்பி வந்து கொல்லப்பட்ட நண்பர்களும் நான் துரோகம் இழைத்தவனாகி விடுவேன். 
 
தனது பேச்சை கேட்கவில்லை எனும் மனவருத்தத்தில் எனது தாயார் நோய்வாய்ப்பட்டு , கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்தார். எனது தாயின் சாவுக்கு நான்  சென்ற வழியும் எனது அரசியலும் காரணம் என இப்பொழுதும் எனது மனதில் கவலை உண்டு. 
 
ஒரு சகோதரன் முதுகில் குத்தி விட்டு போய்விட்டான். இப்போது அவனை நான் சகோதரன் என சொல்வதில்லை முன்னாள் சகோதரன். இவ்வாறாக நான் இழந்தவை பல ..
 
 
முட்டாளும் இல்லை பொய்யனும் இல்லை.
 
இந்த நல்லாட்சியில் தேனும் பாலும் ஓடுது , காணிகள் விடுவிக்கப்பட்டு உள்ளன , அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டு விட்டார்கள் , அரசியல் தீர்வு கிடைத்து விட்டது என்றெல்லாம் நான் பொய் சொல்ல மாட்டேன். அவ்வாறு சொல்ல நான் முட்டாளும் இல்லை பொய்யனும் இல்லை. 
 
ஆனாலும் இந்த இலக்குகளை நோக்கி நாம் பயணிக்கின்றோம். அதன் வேகம் காணாது. 
 
 
நான் பதவி தேடி அரசியலுக்கு வந்தவன் இல்லை. பதவி முக்கியம் எனில் நான் கடந்த ஆட்சி காலத்தில் அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சராகி இருப்பேன். பல கோடிகளை கொட்டித்தர தயராக இருந்தார்கள். எனக்கு பதவியோ பணமோ தேவையில்லை.  
 
அரசியல்  பரவலாக்கம் மாத்திரமே  தீர்வை பெற்று தரும். 
 
இனப்பிரச்சனைக்கு தீர்வு அரசியல் பரவலாக்கம் மாத்திரமே. அதனை விட குறுக்கு வழிகள் எதுவும் இல்லை. 
 
அரசியல் பரவலாக்கம் என்பது கொழும்பில் குவிந்துள்ள அதிகாரம் மாகாணம் , மாவட்டம் , கிராமம் என அனைத்து இடங்களிலும் பரவலாக்கப்பட வேண்டும். 
 
அது தனியே யாழ்ப்பாணம் , கிளிநொச்சி என்று இல்லை மகியங்கனை போன்ற தென் பகுதியிலும் பரவாலாக்கப்பட வேண்டும். 
 
அண்டை மாநிலத்தில் தாக்கப்படும் தமிழர்களையே தமிழ் நாட்டவர்களால் காக்க  முடியவில்லை. 
 
தமிழ் மக்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள மக்கள் உதவி செய்வார்கள். மீண்டும் தமிழர்கள் தனி நாடு கோரி போராடுவார்கள் , புலிகள் மீள உருவாகலாம் எனும் பயம் சிங்கள மக்கள் மத்தியில் காணபப்டுகின்றது. 
 
சிங்களவர்கள் மத்தியில் காணப்படும் இந்த பயம் நியாயமானது. இதனை தமிழ் மக்கள் தமிழ் அரசியல் வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். 
 
அதேபோன்று தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் சிங்களவர்கள் சிங்களம் மட்டுமே ஒரு மொழி , சிங்களவர்களே ஒரு இனம் , பௌத்தம் மட்டுமே ஒரு மதம் என கொண்டுவந்து மீண்டும் தமிழ் மக்களை இரண்டாம் தர பிரஜைகளாக ஆக்கி விடுவார்களே எனும் பயம் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு.  இந்த பயமும் நிஜாயம் ஆனதே..
 
இதனை சிங்கள மக்களும் , சிங்கள தலைமைகளும் புரிந்து கொள்ள வேண்டும். 
 
ஆனால் தமிழ் நாட்டவர்கள் தமது உறவுகள் அண்டை மாநிலத்தில் தாக்க படும் போது அவர்களை காக்க முடியாத இயலாமை உள்ளவர்களாக உள்ளனர். 
 
 
எனக்கு விசரில்லை நான் முட்டாளும் இல்லை.
 
சர்வதேச நீதவான்கள் தேவையில்லை என நான் கூறியதாக சில இணையத்தளங்களில் செய்திகள் வெளிவந்து உள்ளன. அவ்வாறு கூற எனக்கு விசரில்லை நான் முட்டாளும் இல்லை. 
 
இந்த நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் சர்வதேச விசாரணையை கோரவில்லை. அவ்வாறு இருக்கும் நிலையில் நானும் அது பற்றி பேசவில்லை. 
 
சர்வதேச விசாரணை தேவை என ஜனாதிபதி பிரதமர் கோரும் போது அதற்கு நான் தடையாக இருக்க போவதும் இல்லை. சர்வதேச விசாரணை தேவையில்லை என நான் சொல்லவும் மாட்டேன். 
 

கடந்த  ஆட்சியாளர்களை அரசியலில் இருந்து  ஒதுக்கமுடியவில்லை.
 
பிரச்சனை எனது தனியே வடக்குக்கு மாத்திரமோ , தமிழர்களுக்கு மாத்திரமோ இல்லை கடந்த காலத்தில் பல சிங்கள இளைஞர்கள் கடத்தப்பட்டார்கள் கொல்லப்பட்டார்கள். தற்போது கூட்டாச்சி அமைத்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலத்தில் 71ம ஆண்டு காலத்தில் பல சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
 
ஆனால் தமிழ் மக்கள் பிரச்சனை இனவாத சிந்தனையுடனும் , பேரினவாத நோக்குடன் அணுகப்பட்டது. தற்போது இந்த பிரச்சனைகளை தீர்க்க முயற்சிக்கின்றார்கள். 
 
அதற்கு கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் அரசியல் அரங்கில் இருந்து ஒதுங்கவோ , ஒதுக்கபப்டவோ இல்லை. அதனால் அவர்களையும் கருத்தில் கொண்டு இந்த ஆட்சியாளர்கள் செயற்பட வேண்டி உள்ளதனால் சில தாமதங்கள் ஏற்படுகின்றான .
 

இராணுவத்தின் பணி , யுத்தம் செய்வது.
 
இராணுவத்தின் பணி , யுத்தம் செய்வது. தற்போது யுத்தம் முடிவடைந்து விட்டன. அதனால் , அவர்கள் முகாம்களுக்கு இருக்க வேண்டும்.  அதனை விடுத்து  ஆடம்பர விடுதிகள் நடாத்துவது , விவசாயம் செய்வது , கடைகள் நடத்துவது , போன்ற செயற்பாடுகளில் ஈடுபட முடியாது. 
 
யுத்தம் நடைபெற்ற வேளைகளில் இராணுவ முகாம்களுக்கு அருகில் பொது மக்கள் இருந்தால் எறிகணை வீச்சு , தாக்குதல்களில் பாதிக்கப்படலாம் என்பதனால் தான் இராணுவ முகாம்களை சூழவுள்ள பிரதேசங்களை , பாதுக்காப்பு வலயம் என பிரகடனப்படுத்தி அங்கிருந்தவர்கள் வெளியேற்றப் பட்டனர். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. அதனால் பாதுகாப்பு வலயம் எதுவும் தேவையில்லை . 
 
இராணுவத்துடன் பொது மக்கள் சேர்ந்து வாழ முடியாது. அது வடக்கில் மாத்திரம் இல்லை தெற்கிலும் தான். தெற்கில் இராணுவ மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இராணுவ முகாம்களை அமைக்க சிங்கள மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். 
 

தாமே வெற்றி பெற்றவர்கள் எனும் மனநிலை இராணுவம் உள்ளது. 
 
வடக்கில் புராதன தமிழ் ஊர்களின் பெயர்களை சிங்கள மொழியில் மாற்றுவது தனியே மொழி சார்ந்த பிரச்சனை மாத்திரமில்லை. அது இனம் சார்ந்த பிரச்சனை தனது இன அடையாளங்களை நிறுவும் முயற்சி இதனை நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. 
 
அதேபோன்று சட்டவிரோதமான முறையில் நிறுவப்படும் , விகாரைகளையும் அனுமதிக்க முடியாது. அது மிக மோசமான செயற்பாடு. 
 
இது மிகவும் கண்டிக்க தக்க விடயம். இது தொடர்பில் கண்டனங்களை தெரிவிப்போம். இதற்கு எதிராக போராடவும் நடவடிக்கைகளை எடுப்போம். 
 
இங்குள்ள இராணுவம் யுத்தத்தில் வெற்றி பெற்றவர்கள் நாமே எனும் மனநிலையில் உள்ளவர்கள். அதனால் வெற்றி பெற்ற நிலப்பரப்பு எல்லாம் தம்முடையது. எனும் மனோநிலையில் உள்ளனர். 
 
இது தனியே இந்த காலத்தில் ஏற்பட்டது இல்லை முன்னைய காலத்தில் மன்னராட்சியில் கூட வெற்றி பெற்றவர்கள் தமது அடையாளங்களை நிறுவவே முயற்சிப்பார்கள்.
 
இதெல்லாம் ஒரு இரவில் மாற்ற முடியாது. தாமே வெற்றி பெற்றவர்கள் எனும் மனநிலை இராணுவ தரப்பில் மாற வேண்டும். 
 
 
மர்மமான முறையில் உயிரிழந்த முன்னாள் போராளிகள் தொடர்பிலான அறிக்கை தரவில்லை. 
 
 
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாகவும் , அதனால் பல போராளிகள் மர்மமான முறையில் மரணமடைந்ததாகவும் , செய்திகள் வெளியான அவை தொடர்பில் பாராளுமன்றிலும் கதைக்கப்பட்டது.
 
இது தொடர்பில் கவனம் செலுத்தி மரணமடைந்த போராளிகளின் மரண விசாரணை அறிக்கையின் விபரம் கேட்டு இருந்தேன்., இது வரையில் அவை என் கையில் கிடைக்க வில்லை. 
 
இந்த நிலையில் நாம் தொடர்ந்து அது பற்றி பேச முடியாது. ஒரு குற்ற சாட்டை முன் வைக்கும் போது ஆதாரங்கள் தேவை. அதனை விடுத்து வெறுமனையே குற்ற சாட்டை முன் வைத்து அது பொய் என நிரூபணமானால் , அதனை தொடர்ந்து நாம் சொல்லும் அனைத்து விடயமும் பொய் என சர்வதேசம் நம்பும். அதன் பிறகு நாம் சொல்லும் எதனையும் சர்வதேசம் நம்பாது. .
 
 
கலந்துரையாடல் மூலம் பிரச்சனைகளை தீர்க்கலாம். 
 
இனப்பிரச்சனைக்கு தீர்வுக்கு ஒவ்வொருவரும் , ஒவ்வொரு வழிமுறைகளை பின் பற்றினார்கள். தந்தை செல்வா உள்நாட்டுக்குள் ஒப்பந்தங்களை செய்தார். அதன் ஊடாக பிரச்சனைகளை தீர்க்கலாம் என நம்பினார் பின்னர் கடவுள் தான் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என சொல்லி பின்னர் பிறந்து போனார்.
 
அதன் பின்னர் விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஆயுதம் தூக்கி போராடினர். ஆயுத ரீதியில் தீர்வை காணலாம் என நம்பினார் அதுவும் சாத்தியமாகவில்லை.
 
அதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் , எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் , சர்வதேசத்துடன் ஒப்பந்தங்களை செய்து பிரச்சனைகளை தீர்க்கலாம் என நம்புகின்றார் அதன் வழியில் செல்கின்றார். 
 
ஆனால் , நான் கலந்துரையாடல்கள் மூலம் பிரச்சனைகளை தீர்க்கலாம் என நம்புகின்றேன். தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் தமக்கு இடையில் கலந்துரையாடி பிரச்சனைகளை புரிந்து கொண்டு அதனை தீர்த்துக் கொள்ளலாம். என நம்புகின்றேன். 
 
அதற்காக  மத தலைவர்கள் , கலைஞர்கள் ,மாணவர்கள் , போன்றோர்கள் , இடையில் , கலந்துரையாடல்களை நடாத்தி அதன் ஊடாக அனைத்து தரப்பினரின் பிராச்சனைகளும் , அனைத்து தரப்பினரும் புரிந்து கொண்டு பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என நம்புகின்றேன். 
 
எனவே நான் இனப்பிரச்சனையை தீர்த்து கொள்ள கலந்துரையாடல்கள் மூலம் முடியும் என நம்புகின்றேன். அதனால் நான் அந்த வழியை பின் பற்றுகின்றேன்.
Comment(s)
There are currently no comments, be the first to post one.
Add Comment
Only registered users may post comments.
 
 

 

.