செய்திகள்

இணைப்புக்கள்

உங்கள் அபிப்பிராயங்கள்

News Articles

விகாரை கட்டுவதுதான் அரசின் பணியா? குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:

 

தமிழ் இனப் பண்பாட்டழிப்பை மேற்கொள்வதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் அரசு!

விகாரை கட்டுவதுதான் அரசின் பணியா?  
குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:

 
கிளிநொச்சி இரணைமடுவிலுள்ள கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தில் அமைக்கப்படும் பௌத்த விகாரையை அகற்றுமாறு கோரி வடக்கு மாகாண சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் வடகிழக்கில் குறித்த நடவடிக்கைக்கு எதிரான மக்கள் போராட்டங்களும் நடைபெறவுள்ளன. தமிழ் மக்களின் இருப்பை இல்லாதொழிக்கும் இத்தகைய செயல்களை தமிழ் மக்கள் கடுமையாக எதிர்க்கின்றார்கள். இன மத ரீதியான ஒடுக்கமுறை சார்ந்த இந்த அணுகுமுறைகளை தமிழ் மக்கள் கடுமையாக வெறுக்கின்றார்கள். 
 
ஆனால் சில சிங்களத் தலைவர்களின் கருத்துக்கள் அவர்களின் இன மேலாதிக்கப் போக்கையும் தமிழ் மண்ணில் மேற்கொள்ளப்படும் இன நில அழிப்பையும் நியாயப்படுத்தி மேலும் மேலும் இத்தகைய செயல்களுக்கு ஊக்குவிக்கின்றன. கொக்கிளாய் பௌத்த விகாரை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் கடுமையான கண்டனத்திற்குரியது. வடக்கு மக்களின் மன நிலைக்கு நேர் மாறானது. வடக்கு மக்களுக்கு எதிராக இப்படி பேசும் ஒருவர்தான் வடக்கின் ஆளுநராக இருக்கிறார்.
 
வடக்கில் இந்துக் கோயில்களுடன் ஒப்பிடுகையில் பௌத்த விகாரை குறைவு என்று ரெஜினோல்ட் குரோ கூறியுள்ளார். ஆகவே கொக்கிளாயில் பௌத்த விகாரையை அமைப்பதில் என்ன தவறு என்று கேட்கிறார். 1981இல் சிங்கள இராணுவத்தால் தமிழ் மக்கள் தாக்கி இன சுத்திகரிப்பு செய்து கொக்கிளாயை அபகரித்தனர். அங்கு சிங்கள மக்களை கொண்டுவந்து குடியேற்றினர். 2009க்குப் பின்னர் அங்கு மக்கள் சென்றவேளை கிராமத்தின் பாதியே சிங்களக் கிராமமாக மாறியிருந்தது. அதில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக தொழில்புரியும் முகத்துவாரமும் பறிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில்  கொக்கிளாயில் காலம் காலமாக பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் மக்கள் தற்போது எஞ்சிய பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். அங்குள்ள தமிழ் பொதுமகன் ஒருவருக்குச் சொந்தமான - தனியார் காணியில் தற்போது பிக்கு ஒருவர் விகாரையை அமைத்து வருகிறார். அங்கு குடியேற்றப்பட்ட 245 பேருக்கு விகாரையை அமைப்பதாக வடக்கு ஆளுநர் கூறுகிறார். அங்கு தென்னிலங்கை மக்கள் குடியேற்றப்பட்டதால் தமிழ் மக்கள் நிலத்தை இழந்தார்கள். அத்துடன் குடியேற்றப்பட்டவர்களுக்கான விகாரைக்காகவும் நிலம் பறிக்கப்படுகிறது.
 
இதேவேளை கொக்கிளாய் தமிழர்களின் பிரதேசமாக இருந்தாலும் அங்கு அமைக்கப்படும் பௌத்த விகாரையை அகற்ற முடியாது என்றும் அதற்கான அதிகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை என்றும் கூறியுள்ளார் அமைச்சர் ராஜித சேனரத்ன. அரச அமைச்சரவை முடிவுகளை அமைக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் அங்கு சிங்கள மக்கள் வாழ்வதாகவும் அவர்களுக்கு தேவை என்றால் விகாரை ஒன்றை அரசே அமைத்துக் கொடுக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். ஆக, எல்லாமே அரசின் நிகழ்ச்சி நிரலில் திட்டமாறு இடம்பெறுகிறது என்கிறார் அமைச்சர். 
 
சிங்கள அரசியல் தலைவர்கள் இந்த நாட்டில் இனப்பிரச்சினைக்கும் இன முரண்பாட்டிற்கும் அத்திவாரமிட்ட ஆரம்பகால மனநிலைக்கே மீண்டும் செல்லுகின்றனர். இந்த நாட்டில் இன, மத மேலாதிக்கங்களால் தமிழ் இனம் ஒடுக்கப்பட்டபோதே அவர்கள் தனிநாடு கோரிப் போராடினார்கள். சிங்கள இன திணிப்புக்கள், பௌத்த மத திணிப்புக்கள், நில அபகரிப்புக்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை காரணங்களாக இருப்பதை சிங்கள இனவாத தலைவர்கள் மறக்கிறார்களா? அல்லது தெரிந்தே தமிழ் இனத்தை அழித்தொழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்களா? 
 
இப்போது இலங்கை பிரதியமைச்சர் ஒருவர் இரணைமடுவில் அரச காணியில் பௌத்த விகாரை கட்டப்படும் என்று சண்டித்தனமாக பேசியுள்ளார். இன, மத, இராணுவ மேலாதிக்கத்தை நிறுவும் வகையில் விகாரைகளை அமைப்பதுதான் இந்த அரசின் பணியா? ஒரு பௌத்த. சிங்கள, இராணுவ மனப்போக்கை கொண்ட அரசே, இலங்கை அரசு என்பதையா ரஞ்சன் ராமநாயக்கவின் பேச்சு தெளிவாக்குகிறது. அது மாத்திரமின்றி நாட்டில் 70 வீதமானர்கள் பௌத்தர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது சிங்கள நாடு, இது பௌத்த நாடு என்ற மேலாதிக்க மனப் போக்கே இவர்களிடத்தில் மீண்டும் மீண்டும் புலப்படுகின்றது. 
 
நில அபகரிப்பால் கிழக்கில் திருகோணமலையும் அம்பாறையும் பறிபோய்விட்டது. வடக்கில் புத்தளமும் பறிபோய்விட்டது. கிழக்கில் இப்போது மட்டக்களப்பையும் சிங்களக் குடியேற்றம் துண்டாடத் தொடங்கிவிட்டது. வடக்கில் கொக்கிளாய், ஒதியமலை, மன்னார், வவுனியா எல்லைகளும் பறிபோய்விட்டன. இவ்வளவு நடந்தும், இதற்கு எதிராக தமிழ் மக்கள் குரல் எழுப்பி போராடியும் வடக்கின் மையப்பகுதியில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் கிளிநொச்சியில் பௌத்த விகாரையை அமைப்பதும், அதனை மேற்கொள்ள 70 வீதமாக வாழும் பௌத்தர்களுக்கு உரிமை உண்டு என்பதும் தமிழரை அவர்களின் தாய் மண்ணில் முற்றாக துடைக்கும் மத கடும்போக்கின் வெளிப்பாடல்லவா?  
 
தமிழ் மக்கள் இந்த நாட்டில் சிறுபான்மையர்கள். அவர்களின் மத அடையாளங்களும், நிலமும் சிறுபான்மையானதே. சிங்களவர்கள் இந்த நாட்டில் பெரும்பான்மையர்கள். அவர்களின் மத அடையாளங்களும் நிலமும் பெரும்பான்மையானதே. அப்படியிருக்க தமிழர் மண்ணில், தமிழர்களின் வாழிடங்களில் அவர்களுக்குள் பௌத்த விகாரையை கட்டுவோம், அவர்களின் ஆலயங்களுக்குள் பௌத்த விகாரையை கட்டுவோம் என்பது பெரும்பான்மை என்ற இன மத மேலாதிக்கத்தை காட்டி சிறுபான்மை இனத்தையும் சிறுபான்மை மத அடையாளங்களையும் அழிக்கும் செயலாகும். 
 
தெற்கில் சிங்கள மக்கள் குடியிருக்க நிலமின்றியாக இருக்கின்றனர்? தெற்கில் உள்ள ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து வடக்கில் கொண்டு வந்து மக்கள் குடியேற்றப்படுகின்றனர். தெற்கில் புத்தர் சிலை வைக்க இடங்கள் இல்லையா? வடகிழக்கில் தமிழ் மக்களின் ஆலயங்களுக்குள் ஏன் அதனை வைக்க வேண்டும். தமிழ் இனத்தின் தனித்துவத்தை, அவர்களின் தாயகத்தை, அவர்களின் மத தலங்களை அழிக்க வேண்டும், ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முன்னெடுக்கப்படும் இச்செயல்கள் இன அழிப்பு சார்ந்த திட்டமே. 
 
சிங்கள சகோதரர்கள் கௌதம புத்தருக்கு துரோகமிழைக்கின்றனர். அமைதியின் அகிம்மையின், ஞானத்தின் அடையாளமான புத்தரை இலங்கைத் தீவில் இன அழிப்பின், மத ஒடுக்குமுறையின் சின்னமாக ஆக்கியவர்கள் சிங்களச் சகோதர்களே. புத்தரின் கொள்கைக்கு நேர் மாறான இந்தச் செயலை செய்வது அவரது போதனைக்கு எதிரானதுமட்டுமல்ல. அவருக்கு இழைக்கும் துரோகமும் ஆகும். கனகாம்பிகைக் கோவிலுக்கு அருகில் அமைக்கப்படுகின்ற பௌத்த விகாரை அவ்  ஆலய  நிர்வாகத்தின் அனுமதி இன்றியோ அல்லது மக்களின் விருப்பமின்றியோ அமைக்கப்பட்டதாயின் அது பௌத்த ஆகமத்திற்கு முரணானது  என்று பாலியகொட  கங்காராம பௌத்த விகாரையின்  மதகுரு விமலகனா  தேரர் கிளிநொச்சியில் கூறியதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. 
மகிந்த ராஜபக்ச காலத்தில் வடகிழக்கில் பௌத்த மத திணிப்புக்களும் மேலாதிக்கப் போக்குகளும் தலைவிரித்தாடின. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், தமிழ் மக்கள்மீதான இன நெருக்கடிகள் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத மேலாதிக்க அடையாளங்களை திணித்து சிறுபான்மை மதங்களை ஒடுக்கும் செயற்பாட்டில் மைத்திரிபால சிறிசேன அரசு மகிந்த ராஜபக்சவின் அரசையே பின்பற்றுகிறது. ஆட்சி மாற்றத்தின் பின்னரும் பௌத்த மதத்தை தமிழ் மண்ணில் திணித்து வடகிழக்கின் தனித்துவத்தை அழிக்கும் செயற்பாடுகள் தொடர்கின்றன என்பதற்கு கொக்கிளாயும் இரணைமடுவும் நல்ல எடுத்தக்காட்டு. 
 
இவ்வாறு மத, இன மேலாதிக்கத்தை புரிந்துகொண்டே அதனை நியாயப்படுத்திக் கொண்டே மாபெரும் இனப்படுகொலை  போரையும் அதன் குற்றங்களையும் மறக்கச் சொல்கிறார்கள். தமிழ் மண்ணில் எதற்காக போராட்டம் தொடங்கப்பட்டதோ அதனையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டு நல்லிணக்கம் பேசுகிறார்கள். மத ஆக்கிரமிப்பாலும் இன ஒடுக்குமுறையாலும் இராணுவ அணுகுமுறையாலும் நீண்ட, நெடிய போரை, முரண்பாடுகளை, பிரச்சினைகளை சந்தித்த பின்னரும் சிங்கள அரசியல்வாதிகள் இப்படித்தான் அணுகுகிறார்கள் என்றால் தமிழ் மக்கள் மீண்டும் பிரிந்து செல்லும் பாதையையே தேர்ந்தெடுக்க நேரிடும். தமிழ் மக்கள் அரசியல் தேர்வுகளையும் போராட்டங்களையும் சிங்கள தேசமே நிர்ணயிக்கிறது என்பதே வரலாறு. 
 
குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்
அனுப்புக Home, Srilankan News, Articles
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 

 

 

 

 
.