செய்திகள்

இணைப்புக்கள்

உங்கள் அபிப்பிராயங்கள்

News Articles

நூற்றாண்டுகளின் பின்பும் ரத்தம் உறுஞ்சும் அட்டைகளிடையே, றொட்டித் துண்டுகளுடன் வாழும் இனத்தின் துயர்:

 

நடராஜா குருபரன்:-

நூற்றாண்டுகளின் பின்பும் ரத்தம் உறுஞ்சும் அட்டைகளிடையே, றொட்டித் துண்டுகளுடன் வாழும் இனத்தின் துயர்:

கூம்பூட் தமிழ் கலவன் பாடசாலை..

40 வருடங்களுக்கு முன் நான் தவழ்ந்த வீட்டையும் பாடசாலையையும் மீண்டும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் என நான் நினைத்தும் பார்க்கவில்லை. 1ஆம் வகுப்பில் இருந்து 4ஆம் வகுப்புவரை படித்த பாடசாலையின் பெயர் தலவாக்கல சின்னமல்லியப்பூ பகுதியின் கூம்பூட் எஸ்ரேற் பாடசாலை.


இந்தப் பாடசாலையின் ஆசிரியர்கள் இருவர். ஒருவர் என் அருகில் இருக்கும் என் அம்மா பரமேஸ்வரி நடராஜா. மற்றையவர் எங்கள் உறவினர் பூங்கொடி கணேசபிள்ளை.  இவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்ட விடுதிதான் எமது வீடு. இங்கு அம்மா 15 வருடங்கள் கற்பித்தவர்.


கூம்பூட் தமிழ் கலவன் பாடசாலை முன்பாக..

அப்பா கா.செ நடராஜா நுவரெலியா, நானுஓயா, அக்கரப்பத்தனை, லிந்துளை, பதுளை பண்டாரவளை என பல பாடசாலைகளிலும் 35 வருடங்கள் ஆசிரியராக கடமையாற்றியவர். அவர் மாற்றலாகி தன்னுடன் என் அண்ணாவையும், அக்காவையும், யாழ்ப்பாணம் அழைத்துச் சென்ற பின்னும் அம்மாவுடன் நான் தலவாக்கலையில் இருந்தேன்.


வெள்ளிக் கிழமை மாலையில் இருந்து திங்கட் கிழமை காலை வரை மலையகத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள் பலர் ஒன்று கூடும் இடமாகவும் எமது இந்தச் சிறிய வீடு இருந்தது. அப்போது அம்மாவின் மாத சம்பளம் 80 ரூபாவில் இருந்து 140 ரூபா வரைதான் இருக்கும். என்னுடன் கற்ற மாணவர்களின் குடும்பங்கள் பல, சிறீமா சாஸ்த்திரி ஒப்பந்தத்திற்கு இணங்க பலாத்காரமாக கப்பல் ஏற்றி இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள்... அவ்வாறு குடும்பங்கள் புறப்பட்டு செல்லும் போது அவர்கள் அழுத அழுகையும் கூக்குரல்களும் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன.


(கூம்பூட் தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியர்கள் தங்கும் விடுதி முன்பாக ஆசிரியரான என் அம்மாவுடன்...)

பெரிய துரை, சின்துரை, (சுப்பிரிடன்ஸ்) கிளாக்கர், சுப்பவைசர், கங்கானி, ரீமேக்கர், கணக்குப் பிள்ளை இப்படியான சொற்பதங்கள், அவர்களின் உரையாடல்கள், காமன் கூத்து, கரகாட்டம், என்றெல்லாம் எத்தனை ஞாபகங்கள் வந்து போகின்றன.


70களில் இருந்து 80களின் நடுப்பகுதி வரை யாழ்ப்பாண ஆதிக்கத்திற்கு மலையகம் உட்பட்டு இருந்த காலம் அது... யாழ்ப்பாணத்து வியாபார நிலையங்களால், ஆசிரியர்களால், கோவில்களின் பூசகர்களால், சிவில் உத்தியோகத்தர்களால் மலையகம் நிரம்பியிருந்த காலத்தில் தான், நானும் சிறுவனாக தேயிலைக் கொழுந்துகளிடையே வாழ்ந்த ஞாபகங்களை என் குடும்பத்துடன் மீட்டுப் பார்க்கும் அரிய சந்தர்ப்பம் கிடைத்தது.


கூம்பூட் தமிழ் கலவன் பாடசாலை.. முன்பாக ஆசிரியரான அம்மாவும் நானும்...

இவை என் ஞாபகங்கள்.. ஆனால் இந்தப் பயணத்தின் துயரப் பகிர்வே இங்கு முக்கியமானது. பிரித்தானியரால் இலங்கை விடுவிக்கப்பட்டு, அதன் பின் இலங்கையின் ஆளுகைக்கு உட்பட்ட பின்னும் மலையகத் தோட்டப் பகுதிகளை, இலங்கையின் ஆட்சியாளர்களும், அவர்களுக்கு மிண்டு கொடுக்கும் மலையக அரசியல் கட்சிகளும், தலைவர்கள் எப்படி வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இதனை விட வேறு உதாரணங்கள் தேவையில்லை...


நான் கல்வி கற்ற காலத்தில் இருந்தததை விட மிக மோசமான நிலையில் தான் இந்த தேயிலைத் தோட்ட வாழ்முறை அமைந்திருக்கிறது. மலையின் அடிவாரத்தில் இருந்து இந்த பாடசாலைச் சூழல் அமைந்து உள்ள பகுதிக்கு செல்லும் வீதி, அங்குள்ள குடியிருப்புகள் எவ்வளவு மோசமாக இருக்கின்றன என்பதற்கு இந்தப் பாடசாலையின் காட்சியே போதுமானது. எமது வாகனம் இந்தப் பகுதியை நோக்கி உயரே செல்லத் தொடங்க 'சாவை நோக்கி எம்மை அழைத்துச் செல்கிறீர்களா?' என என் பிள்ளைகள் கேட்டார்கள். மிக ஒடுங்கிய கரடு முரடான பற்றைகள் நிறைந்த, குன்றும் குழியுமான மலைப் பாதையில் சென்று மீண்டும் அடிவாரத்தில் பிரதான வீதியை அடைந்த பின்புதான் என்னுடன் வந்தவர்கள் சாரதிக்கு தமது நன்றியை தெரிவித்தார்கள்..


கூம்பூட் தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியர்கள் விடுதி முன்பாக....

இந்தப் பாடசாலையில் தற்போது கற்பிக்கும் ஆசிரியர்தான் இந்த வீட்டில் இருக்கிறார். அவர் நாம் சென்ற போது வினாத்தாள்கள் திருத்தும் பணிக்கு சென்றதாக அவரின் மாமியார் சொன்னார். இங்கு கற்ற 5ஆம் வகுப்பிற்கு உட்பட்ட மாணவர்கள், தற்போது  தற்காலிகமாக, அருகில் உள்ள மற்றும் ஒரு பாடசாலைக்கு மாற்றப்பட்டு இருப்பதாக கூறிய அவர், பாடசாலையில் திருத்த வேலைகள் இடம்பெற உள்ளதாகவும் சொன்னார். 40 வருடங்களுக்கு மேல் திருத்தப்படாத பாடசாலையும், அதன் சூழலும் இனிவரும் காலத்திலும் திருத்தப்படும் என்ற நம்பிக்கை எனக்கில்லை...


இன்றைய இலங்கைக்காக, ரத்தம் உறுஞ்சும் அட்டைகளின் கடிகளைத் தாங்கி, ரொட்டித் துண்டுகளுடன், மழையிலும் குளிரிலும் உயர் மலைப் பிரதேசங்களில் தேயிலைக் கொழுந்துகளை சுமந்த ஒரு இனம் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே வாழ்வியலைத்தான் இன்னும் தொடர்கிறது என்பது எவ்வளவு அபத்தமானது....
 

அனுப்புக Home, Srilankan News, Articles
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 

 

 

 

 
.