செய்திகள்

இணைப்புக்கள்

உங்கள் அபிப்பிராயங்கள்

News Articles

முன்னாள் போராளிகளை விரைவாக கொல்கிறது ஊசி உளவியல்: மு.தமிழ்ச்செல்வன்

 

முன்னாள் போராளிகளை விரைவாக கொல்கிறது ஊசி உளவியல்: மு.தமிழ்ச்செல்வன்

 


இப்பொழுதெல்லாம் வன்னியில் ஒரு முன்னாள் போராளியை மற்றொரு முன்னாள் போராளி சந்தித்தால் உனக்கும் தடுபில் ஊசி போட்டதா? உடம்பில ஏதாவது மாற்றங்கள் நடக்குதா? என்று கேட்கின்றார்கள் என கிளிநொச்சி திருவையாறைச் சேர்ந்த ஒரு முன்னாள் போராளி தெரிவித்தார்.

இதனை விட தனது மனைவி  அப்பா நீங்கள் தடுப்பில் இருந்த நேரத்தில் உங்களுக்கு ஊசி ஏதாவது போட்டவங்களா? சொல்லுங்கோ எனக்கு பயமா இருக்கு அப்படி போட்டிருந்தால் கொழும்புக்கு கொண்டுபோய் பிறைவேற்றா என்றாலும் எவ்வளவு காசு செலவழிஞ்சாலும் பரவாயில்லை செக்கப் செய்வம் என தொடர்ச்சியாக கெஞ்சிக் கேட்பதாக அந்த முன்னாள் போராளி குறிப்பிட்டார்.


 மேலும் கிளிநொச்சி தொண்டமான்நகரை சேர்ந்த மற்றொரு முன்னாள் போராளி சொன்னார் தனது அம்மா பல தடவைகள் தன்னை அழுதழுது கேட்கின்றாராம்  ஊசி போட்டதா சொல் என்று. தான் மேசன்  வேலை செய்கின்றவர் என்றும் சில நேரங்களில் கொங்கிறீட் வேலை என்றால் மாலை களைப்புற்று வீடு திரும்பி இயலாமல்  இருக்கு என்று ஓய்வெடுத்தால் உனக்கு என்ன செய்யிறது முந்தி நீ இப்படி இல்லை எனக்கு பயமா இருக்கு தடுப்பில் ஊசி ஏதேனும் போட்டவங்களே என்று கண்ணீருடன் கேட்பாராம் என்றார்.

மற்றொரு  முன்னாள் பெண் போராளி அவர் திருமணம் செய்தது ஒரு முன்னாள் போராளியை அவர் சாரதி. இவர் சிவில் பாதுகாப்பு திணைக்கள பண்ணையில் பணியாற்றுகின்றார். ஒரு குழந்தை கிளிநொச்சி உதயநகரில் வசிக்கின்றார்கள். வேலைக்கு செல்லும் போது தனது பிள்ளையை அம்மாவின் வீட்டில் கொண்டு சென்று விட்டுச் செல்வது வழமை என்றும் ஆனால் தற்போது தன்னைப் பார்த்து நீயும் ஒரு முன்னாள் போராளி, உன்ர மனுசனும் ஒரு முன்னாள் போராளி  தடுப்பில் விச ஊசி போட்டவங்கள் என்று எல்லோரும் சொல்லியினம் நீங்கள் இரண்டு பேரும் செத்துப்போனால் இந்தப் பிள்ளையை யார் பார்ப்பது, என்று வெளிப்படையாகவே கேட்பதாக அவர் கவலைதெரிவித்துள்ளார்.

இன்னொருவர் சொன்னார் தன்னை தனது ஊரவர்களும், நண்பர்களும் விச ஊசி போடப்பட்டதா என கேட்கின்ற போதெல்லாம் தனக்கு ஏதோ செய்வதாக என்று. பிறிதொரு முன்னாள் போராளி குறிப்பிட்டார் தனக்கு தற்போது தலைவலி, இடுப்பு வலி என வருத்தங்கள் வந்தால் மனம் விச ஊசிக்கு சென்று விடுகிறது என்று.

இதுதான் இன்றைய முன்னாள் போராளிகளின் நிலைமை. மெல்லக் கொல்லும் விச ஊசி போடப்பட்டதா இல்லையா என்று மருத்துவ ரீதியான நிரூபிக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் எதுவும் இல்லாத நிலையில் அரசியல் தரப்புக்களும் குறிப்பாக தமிழ் அரசிய தரப்புக்கள் மற்றும் சில ஊடகங்களும் அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசி வருகின்றமையினால் எல்லா முன்னாள் போராளிகளும் உளவியல் ரீதியாக கொல்லப்பட்டுக்கொண்டிக்கின்றார்கள். இந்த நிலைமை  முன்னாள் போராளிகளின் குடும்பங்கள், உறவினர்கள்  சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் போராளிகளை அனுதாபத்தோடும் இரக்கத்தோடும் பார்க்கும் நிலைமை அவர்களை பாதிப்புக்குள்ளாக்குகின்றன.

17-08-2016 அன்று வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைப் பற்றிய கலந்தாலோசனை செயலணியின் அமர்வில் ஒரு முன்னாள் போராளி தனது கருத்துக்களை குறிப்பிடும் போது சொன்னார். தான் இயக்கத்தில் போராளியாக இருந்த காலத்தில் சண்டையில் எப்போதும் இறந்துவிடலாம் என்ற நிலையில் தனது குடும்பம் ஒரு வித பதற்றத்துடன் இருந்ததாகவும் அந்த பதற்றம் புனர்வாழ்வு பெற்று வந்த பின்னர் இல்லாது இருந்ததாகவும் ஆனால் தற்போது மீண்டும் அதே பதற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்த அவர் சாதாரணமாக வழமையாக ஏற்படுகின்ற நோய்கள் வருகின்ற போதெல்லாம் மனம் ஊசி நோக்கிச் சென்று விடுகிறது என்றார்.

புனர்வாழ்வுக் காலத்தில் பெருமளவுக்கு வவுனியாவுக்கு அப்பால் உள்ள புனர்வாழ்வு முகாம்களில் முன்னாள் பேராளிகள் பலருக்கு ஊசி ஏற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் அது  என்ன ஊசி என்பதுதான் பிரச்சினையே. விஞ்ஞான ரீதியான ஆய்வு முடிவுகள் எதுவும் இன்றி  ஏற்றப்பட்டது மெல்லக் கொல்லும் விச ஊசி என தமிழ் அரசியல்வாதிகளும்  தமிழ் ஊடகங்களும் கருத்துகளை பரப்பி வருவது புனர்வாழ்வுப்பெற்று வந்த முன்னாள் போராளிகளையும் அவர்களது குடும்பங்களையும் மனதளவில் பாதிப்புகளுக்கு உள்ளாக்கியேயுள்ளன.


பூசாவில் புனர்வாழ்வுப் பெற்ற  காலத்தில் உலகளவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வந்தமையினால்  அதற்கான தடுப்பு ஊசி என நூற்றுக்கணக்கான போராளிகளுக்கு ஊசி ஏற்றப்பட்டன என்றும் இராணுவத்தின் பிரசன்னத்திற்கு மத்தியில் சிவில் உடையில் வந்தவர்களே ஊசி ஏற்றினார்கள் என்று ஒரு முன்னாள் போராளி குறிப்பிட்டார். ஆனால் அவருக்கு என்ன ஊசி அது எனத் தெரியாது. ஆனால் தற்போது தனக்கு உடலில் பல உபாதைகள் ஏற்படுகிறது என்றும்  கடின உழைப்பாளியான தன்னால் தற்போது அவ்வாறு எந்தப் பணிகளையும் செய்ய முடியா திருப்பதாகவும் தெரிவித்த அவர் முதலில் மருத்துவ பரிசோதனை செய்து என்ன பிரச்சினை என்று கண்டறிய வேண்டும் என்றும் இல்லை எனில் தானும் தனது குடும்பமும் நிம்மதியாக வாழ முடியாது எனவும் தெரிவித்தார்.

வெலிகந்த சேனபுர புனர்வாழ்வு முகாமிலிருந்த மற்றொரு மூத்த முன்னாள் போராளி சொன்னார் முகாமிலிருந்த காலத்தில் வரிசையாக விட்டு ஊசி போட்டப்பட்டது நோய்க்கான தடுப்பு ஊசி என்று தங்களுக்குச் சொல்லப்பட்டது. ஊசி ஏற்றியவர்கள் பொலனறுவை வைத்தியசாலையில் இருந்து வந்த மருத்துவர்கள். ஆனால் அது தடுப்பு ஊசியா? அல்லது எல்லோரும் குறிப்பிடுவது போன்று விச ஊசியா என்பது எங்களுக்கு தெரியாது. எனத்தெரிவித்த அவர் விரைவில் இதற்கு முடிவு கட்ட வேணும் தவறின் முன்னாள் பேராளிகள் மன ரீதியாக பாதிப்புக்குள்ளாகிவிடுவார்கள் என்று வலியுறுத்தினார்.


முன்னாள் போராளிகளின் ஊசி விடயம் தொடர்பில் சர்வதேச மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு அதில் எவ்வித உண்மையும் கண்டறியப்படவில்லை என்றால் சர்வதேச மட்டத்திலும் சரி உள்ளுர் மட்டத்திலும் சரி தங்களை எல்லோரும்  நகைப்பிற்கிடமாக நோக்குகின்ற சூழல் ஏற்படும். இப்போது இந்த விடயத்தை பற்றி பேசுகின்ற அரசியல்தரப்புகளும், ஊடகங்களும் அப்போது எங்களுக்கு எதிராக பேசுவார்கள் இது முன்னாள் பேராளிகளை மேலும் மனதளவில் பாதிக்கும். எங்களை தங்களின் அரசியல் நோக்கங்களுக்காக காலத்திற்கு காலம் பயன்படுத்தப்படுதனை தவிர்க்க வேண்டும் என்றும் ஒரு முன்னாள் போராளி கவலையுடன் தெரிவித்தார்.


எனவேதான் புனர்வாழ்வுக் காலத்தில் எல்லோருக்கும் இன்றி பலருக்கு ஊசி ஏற்றப்பட்டிருக்கிறன. ஆனால் அது என்ன ஊசி? எதற்காக ஏற்றப்பட்டது? போன்ற கேள்விகளுக்கு தெளிவான விஞ்ஞான ரீதியான முடிவுகள் எதுவும் இன்றி அறிக்கைகள் மற்றும் கருத்துகளை வெளியிட்டு ஏற்கனவே பல பாதிப்புகளுக்குள்ளாகியுள்ள முன்னாள் பேராளிகளை மேலும் பாதிப்புகளுக்குள்ளாக்காமல் பொறுப்புடன் விடயத்தை கையாள வேண்டும் என்பது அனைத்து முன்னாள் போராளிகளினதும் வேண்டுகோளாக அமைகின்றன.

முன்னாள் பேராளிகளுக்கு ஏற்றப்பட்டது விச ஊசியா? தடுப்பு ஊசியா? அது மெல்லக் கொல்லுமா இல்லையா? என்ற விவகாரத்திற்கு விரைவில் முடிவு இல்லையெனில் எல்லா முன்னாள் பேராளிகளையும் ஊசி உளவியல் விரைவாக கொன்று விடும்

அனுப்புக Home, Srilankan News, Articles
அபிப்பிராயங்கள்
(1) அபிப்பிராயங்கள்
19-08-2016, 08:55
 - Posted by Anonymous
வாழ்வில் நிம்மதி தொலைத்து தமிழினம்வாழ வேண்டும் என்பதே தமிழ்த்தலமைகளின எண்ணம் போல அதுதான் உளவியல் போர் தொடுத்து இவ்வாறான மன உளைச்சலை உருவாக்குகின்றனர்.
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 

 

 

 

 
.