(GMT)
வியாழன், 20 செப். 2018

செய்திகள்

இணைப்புக்கள்

எங்களைப்பற்றி

 இருண்ட காலத்தில் ஒரு உதயம்

 

ஊடகவியலாளர்கள் கொல்லப்படுதல், கடத்தப்படுதல் என இலங்கையின் கொடூரமான காலப்பகுதியென எல்லோராலும் உணரப்பட்ட 2007 ஆண்டின் பிற்பகுதியில், கட்டாயப் புலப்பெயர்வுக்கு உட்பட்டு ஐக்கிய ராஜயத்துக்குப் புலம் பெயர்ந்த ஊடகவியலாளரான நடராஜா குருபரன் தனது தோழியரான இளம்பூரணி குருபரனுடனும், அப்போது ஐக்கிய ராஜ்யத்தில் வாழ்ந்த மனமொத்த தனது ஊடக நண்பர்களுடனும் இணைந்து உருவாக்கியதே குளோபல் தமிழ் நியூஸ் நெட்வொர்க் எனும் எமது நிறுவனம் 

புசிப்பதற்கு மட்டுமே வாயைத் திறக்க முடியும் நிலையில் இலங்கைத் தமிழர்களும் சிங்களவர்களும் வாழும் புலத்தில், இதுவரை காலமும் ஆதரவு-எதிர்ப்பு எனும் இருதுருவ நிலைப்பட்ட வட்டத்துள்ளேயே சுழன்றுகொண்டிருந்த ஊடகத்தினை ப‌ல் வேறுபட்ட கருத்துக்களும் பதிவு செய்யப்படும் தளத்திற்கு நகர்த்த நாம் முற்படுகிறோம்.

ஐக்கிய ராஜ்யத்தின் தலைநகர் இலண்டனை மையமாகக் கொண்டு இயங்கும் எமது நிறுவனம் உலகெங்கிலும் பரந்து வாழும் எட்டு கோடிக்கும் மேலான தமிழ் மக்களுக்கும், ஒன்றரைக் கோடி அளவிலான சிங்கள மக்களுக்கும்  செய்திகளைக் கொண்டு சேர்க்கும் நிறுவனமாகச் செயல்பட குளோபல் தமிழ் நியூஸ் நெட்வொர்க் முனைகிறது.

எமது செய்தி நிறுவனத்தின் சார்பில் குளோபல் தமிழ் ஓலிபரப்புக் கூட்டத்தாபனம் 24 மணிநேர வானொலி ஒன்றினை நடத்தி வருகிறது. சமகாலச் செய்திகள், செய்திப் பகுப்பாய்வுகள், கலாச்சார மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை எமது வானொலியின் ஊடே நாங்கள் தருகிறோம். யூ-டியூபின் வழி தொலைக்காட்சிச் சேவையினையும் வழங்கி வருகிறோம். எமது சொந்தத் தயாரிப்பிலான ஆவணப்படங்களும் குறும்படங்களும் ஒளிப்பதிவு நிகழச்சிகளும் இதில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுவரையிலும் 900 ஒளிப்பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எமது வானொலியையும் தொலைக் காட்சியையும் இணைப்பதற்கென நாம் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளில் தனித்தனியே இணையங்களை நடத்தி வருகிறோம். இது மட்டுமன்றி இந்திய தமிழ் மற்றும் சிங்கள சினிமாக்களுக்கெனெவொரு பொழுது போக்கு இணையத்தளத்தினையும் நடத்தி வருகிறோம்.

நாம் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எமது தமிழ் இணையத்தளத்தை ஆரம்பித்தோம். இரண்டு மாதங்களின் பின் நாம் இணைய வானொலியையும் தொடங்கினோம். பிப்ரவரி 2009 ஆம் ஆண்டு எமது வானொலி செய்மதி வானொலியும் ஆகியது.

உலகின் மிக முக்கியமான தமிழ், சிங்கள ஊடகவியலாளர்களும் அறிவாளிகளும் எமக்காகப் பணியாற்றுகிறார்கள். எமது நேரடிச் செய்தியாளர்கள் இன்று இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற இடங்களில் இருந்து செயல்படுகிறார்கள்.

உள்நாட்டுப் போர்க்காலகட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த அரிய செய்திகளை நாம் ஆவணப்படுத்தியிருக்கிறோம். அரச நிறுவனங்களும், அரசு சாரா நிறுவனங்களும், தனி மனிதர்களும் எமது ஆவணத்தில் உள்ள செய்திகளை அதிகாரபூர்வமான ஆவணங்களாகப் பாவிக்கிறார்கள்.

புகலிடத்திலும் இலங்கையிலும் உள்ள ஊடகங்களில் நாங்கள் மட்டுமே உடனுக்குடன் மும்மொழிகளிலும் செய்திகளையும் கட்டுரைகளையும் பரஸ்பரமாக மொழிபெயர்த்து வெளியிடுகிறோம். எமது செய்திகளையும் கட்டுரைகளையும் இலங்கை இந்திய ஊடகங்கள் பரவலாக மறுபதிப்புச் செய்து வருகின்றன.

2010இல் தொடங்கி நாங்கள் ஆவணப்படங்கள் மற்றும் குறும்படத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். 2012 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் எமது கட்டுரைகளின் களஞ்சியத்திலிருந்து தொகுக்கப்பட்ட ஆக்கங்களைக் கொண்டு, மனித உரிமை, ஊடக ஒடுக்குமுறை, இலங்கை அரசியல் குறித்த பத்துத் தொகுதி நூல்களைக் கொண்டு வரவிருக்கிறோம். 2013 ஆம் ஆண்டு முதல்  முழுமையான தொலைக்காட்சி ஒன்றினைத் துவங்குவதற்காகச் செயல்பட்டு வருகிறோம். இதன் போது காத்திரமான தமிழ் சிங்கள நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கும் முனைப்பையும் கொண்டிருக்கிறோம்.

ஆக‌ உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழ் முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களின் சிந்தனை மற்றும் பௌதீக வாழ்வுத் தளத்தில் ஒரு சுதந்திர ஊடகத்தை உருவாக்க நாங்கள் முனைகிறோம். இருதுருவ நிலைபாட்டிலிருந்து வெளியேறிப் பன்முகக் கருத்துக்களைத் தரும் ஒரு சுதந்திர ஊடகமாக மிளிர‌ நாம் முனைகிறோம். இன,பால்நிலை,மொழி உரிமைகளுக்கு எதிரான நிலைப்பாடுகளை நாம் நிராகரிக்கிறோம். மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நாம் குரல் கொடுக்கிறோம்.

எல்லா விதமான‌ ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகக் குரல் கொடுக்கிறோம். எதிர்கால சுதந்திர, சமத்துவ உலகு நோக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அனைத்துக்கும் மேலாகக் கருத்துச் சுதந்திரத்திற்காக உரத்துக் குரல் தருவதென்பதில் நாங்கள் உறுதியாகவிருக்கிறோம். எம‌து உன்னதமான நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான அடித்தளங்களை இடும் முனைப்பின் நிலைபேறாகவே குளோபல் தமிழ் நியூஸ் நெட்வொர்க் என்ற நிறுவனம் கனிந்திருக்கிறது. 

 

Nadarajah Kuruparan

Managing Director.

Global Tamil Media Net Work LTD.

www.globaltamilnews.net,www.gtbc.fm,

www.gtntv.net,www.tamilnewscinema.com

 Tel (main): + 44 208144 7262

Tel (direct): + 44 203287 2876

Tel (mobile): + 44 7769686764

Email radiokuru@yahoo.com

Skype Id - globaltamilnews

 

 

 

 

 

 

 

 
 .